வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தி.மு.க.வில் அமைச்சரவை மாற்றம் மற்றும் மா.செ.க்கள் மாற்றத்தை அறவித்திருக்கிறார் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்!
விழுப்புரம், ஈரோடு மாவட்டங்கள் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகள் என பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் செயல்பட்டுவந்த நிலையில், தற்போது மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, திருப்பூரில் வடக்கு, தெற்கு பிரிவுகளுடன் கிழக்கு &- மேற்கு என இரு பிரிவுகள் கூடுதலாக அமைக்கப்பட்டு, அதற்கும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மறுபுறம், வடக்கு, தெற்கு, மாநகர் என மூன்றாக இருந்த மதுரை மாவட்டம், வடக்கு மற்றும் மாநகர் என இரண்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பொறுப்புகளை பொறுத்தவரை, ஈரோட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரோடு சட்டமன்ற தேர்தல் வெற்றியை கவனத்தில் வைத்துதான் இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவிருந்து வந்தவராக இருந்தாலும் கூட, இடைத்தேர்தலில் முதல்வர் உட்பட பெரும் தலைகளின் பிரசாரங்கள் இல்லாமலேயே சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை ஜெயிக்க வைத்ததற்கான பரிசாக இது பார்க்கப்படுகிறது.
இன்றைய சூழலில் எடபாடிக்கும், அதிமுக சீனியர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கட்டம் சரியில்லாமல் இருக்கிறது. இந்த குழப்பத்தை பயன்படுத்தி கொங்குவை முழு கட்டுப்பாட்டில் எடுக்கும் அசைமெண்ட்டுக்கு பொறுப்பாளராக தோப்பு வெங்கடாச்சலம் களமிறக்கப்பட்டிருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவரும், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்து எம்எல்ஏ-வாக தேர்வான லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தை பொறுத்த அளவில் பொன்முடி ஆதரவாளர்களும், செஞ்சி மஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சலசலப்புகள் இருந்து வந்தன. நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் மஸ்தானும், பொன்முடியும் பங்கேற்றிருந்தபோது, திடீரென மஸ்தான் கையிலிருந்த மைக்கை பொன்முடி பிடுங்கினார். இது மோதலின் உச்சமாக பார்க்கப்பட்டது. இதனையடுத்து கட்சியில் மஸ்தான் குடும்ப உறுப்பினர்கள் வகித்து வந்த பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்பட்டன. இறுதியாக அமைச்சரவையிலிருந்தும் மஸ்தான் நீக்கப்பட்டார். ஆனால், தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒத்துழைப்பும், கூட்டு உழைப்பு அவசியம். எனவே இரு தரப்புக்கும் பஞ்சாயத்து வராத வண்ணம், லட்சுமணனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மறுபுறும் மஸ்தானை கைவிடவில்லை என்பதை தெரிவிக்கும் விதமாக விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கு அவரை செயலாளராக கட்சி தலைமை நியமித்திருக்கிறது. திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்கு அப்துல் வஹாப் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இங்கும் இதே பிரச்சனைதான். மேயராக சரவணன் இருந்தபோது, அவருக்கும் அப்துலுக்கும் உரசல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரின் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். மோதல் குறித்து மூத்த அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் நேருவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து அப்துலின் மா.செ பதவி பிடுங்கப்பட்டது. இப்போது மேயரும் மாறியிருப்பதால், சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதாலும் மீண்டும் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
மற்றபடி, நீலகிரியில் படுகர் சமூகத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கே.எம்.ராஜூ புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும், இளைஞர்களுக்கு பிரதிநித்துவம் அளிக்கும் வகையில் திருப்பூர் மேயர் தினேஷ் இரண்டு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மேயர் தேர்தலில் மிகுந்த செல்வாக்கு இருந்த பத்மநாபனை, ஓவர் டேக் செய்துதான் தினேஷ் சீட் வாங்கி வெற்றி பெற்றார் என்பது தனிக்கதை. ஆஸ்திரேலியாவில் எம்ஐபி படித்த அனுபவம், சிறிய வயது என்பதால் இளைஞர்களை இவர் மூலம் ஈர்க்கலாம் என கட்சி கணக்கு போட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்த ரமேஷ்ராஜுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தலித் சமூகத்திற்கு பிரதிநித்துவப்படுத்தும் வகையில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல தஞ்சாவூரில் வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்த பழனிவேலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், மாற்றுகட்சியில் இருந்து வந்தவர்கள், இஸ்லாமிய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம், தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.