திருநெல்வேலியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ‘நம்முடைய நயினார் நாகேந்திரன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிமையோடு பேசியதுதான் தி.மு.க.வினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
பா.ஜ.க. தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிப்பார் என தகவல்கள் வெளியாகிறது.
இதனிடையே அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இடையில் சுமூகமான உறவு இல்லை. சில நாட்களுக்கு முன் நயினார் நாகேந்திரனை அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது, ‘நயினார் அண்ணனுக்கு ரெய்டு விடுவதற்கான அதிகாரம் இல்லை!’ என கடுகடுத்தார் அண்ணாமலை! காரணம், நயினார் நாகேந்திரனுக்கு தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னர்தான் அண்ணாமலை இந்த விமர்சனத்தை வைத்தார் என்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் நயினார் நாகேந்திரன் மாற்றுக் கட்சிக்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனென்றால் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனுக்கு இருக்கும் ஆதரவு காரணமாக, பல்வேறு கட்சிகளில் இருந்தும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருநெல்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தரப்பில் எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையேற்று பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘கடந்த 2023ம் ஆண்டு நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்காக தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்டது. அந்த நேரத்தில் இடைக்கால நிதியுதவியை கூட மத்திய அரசு செய்யவில்லை. நம்முடைய நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக் கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால் அவர் பேச மாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்த போது நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, அமைச்சராக செயல்பட்டவர். திமுக நிர்வாகிகளுடன் அவருக்கு நட்பு உள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, ‘‘நம்முடைய நயினார் நாகேந்திரன்’’ என்று கூறியுள்ளதால், அவர் விரைவில் திமுகவுக்கு வருவாரோ என்ற பேச்சுக்கள் எழுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க., அ.தி.மு.க. இந்த இரண்டும்தான் ஆளும் கட்சிகளாக வரவாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க. பிளவுபட்டுக் கிடக்கும் நிலையில், நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் தி.மு.க.விற்கு அவரை செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். தி.மு.க. தலைமையும் நயினாருக்காக சிவப்புக் கம்பளம் விரித்து காத்திருப்பதும் உண்மைதான் என்றனர் அறிவாலய வட்டாரத்தில் இருந்து. காரணம், நெல்லை தி.மு.க.வில் தலைவிரித்தாடுகிறது கோஷ்டி பூசல். நயினார் நாகேந்திரனைப் போல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நபர் இருந்தால், கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என நினைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால்தான் இந்த திடீர் பாசம் என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்!
ஆக மொத்தத்தில் அண்ணாமலையின் செயல்பாடுகளால், பா.ஜ.க.விலிருந்து பலர் தி.மு.க.விற்கு செல்லலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!