நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தது பற்றி மற்றக் கட்சிகள் கவலைப்படுகிறதோ இல்லையோ, தி.மு.க. கவலைப்படுகிறது. காரணம், விஜயகாந்த்தைப் போல் விஜய்யும் இரண்டாவது முறையாக தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பை தடுத்துவிடுவாரோ என்ற அச்சம்தான் என்கிறார்கள்.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம், ‘‘விஜய் தீவிர கள அரசியலில் இறங்கிவிட்டதால், திமுக தலைமை சற்று கலக்கமடையத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், விஜய் அடுத்ததாக வேங்கைவயல் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், குற்றப்பத்திரிகையில் மூவர் குற்றவாளிகாக காட்டப்பட்டிருக்கிறது.
விஜய்யின் நகர்வுகளால் அவசர நடவடிக்கைகளில் திமுக அரசு இறங்கியிருக்கிறது. அதாவது, சமீபத்தில் பரந்தூருக்கு விஜய் சென்றதால், மக்களிடையே பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் கிடைக்க, சற்று கலக்கமடைந்துள்ளது. அது தீர்வதற்குள், விஜய் அடுத்ததாக வேங்கைவயலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ள வேங்கைவயல் விவகாரத்தில், நீதிமன்ற வழக்கு, தமிழக அரசு விளக்கம், திருமாவளவன் அறிக்கை என பல அப்டேட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. விஜய் அங்கு செல்வதற்குமுன், இந்த பிரச்னையை ஆஃப் செய்ய வேண்டுமென ஆர்டர்கள் பறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழ் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல தலைவர்கள் இந்த விவகாரத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை கேட்டும் குரல் எழுப்பினர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் கிடந்த இந்த வழக்கில், சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில், வேங்கைவயல், இறையூர் ஆகிய கிராமங்களை உள் அடங்கிய முட்டுக்காடு கிராமத்தின் தலைவர் பத்மா முத்தையா, அங்கிருந்த குடிநீர் தொட்டியின் ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததாகவும், அதற்காக, பத்மாவின் கணவர் முத்தையாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்ற நபர் பொய் தகவலை பரப்பி, அதனைத் தொடர்ந்து குடிநீர் தொட்டி மீது ஏறி முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் மனித கழிவுகளை கலந்ததாகவும் குறிப்பிடபட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என விசிக தலைவர் திருமாளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சிபிஐ விசாரணை தேவை என கம்யூனிஸ்ட் கட்சியும், யாரை காப்பாற்ற யாரை பலிகொடுப்பது? என இயக்குனர் பா.ரஞ்சித்தும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, பட்டியலின சமூகம் பயண்படுத்தும் குடிநீர் தொட்டியில், பட்டியலினத்தை சேர்ந்த சிலரே மனித கழிவுகளை கலந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அதை உறுதி செய்யும் வகையில் சில ஆடியோ, வீடியோ ஆதாரங்களும் பரவி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தின் தொடக்கத்திலேயே, மனிதக் கழிவுகளை கலந்தது பட்டியலின இளைஞர்கள் தான் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்ததாகவும், அதனை வெளியிட்டால், தேவை இல்லாத சலசலப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்ததாகவும் சொல்லபடுகிறது.
சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய், இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை, ஆனால் அவரது வருகையின் தாக்கம் பல பிரச்னைகளை தீர்த்துக்கொண்டு வருகிறது. ஆம், தான் ஆட்சிக்கு வராவிட்டாலும், தன் பெயரை வைத்தே தமிழ்நாட்டின் பல முக்கிய பிரச்னைகள் தீர வழிவகுத்துக்கொடிருக்கிறார் விஜய். அதற்கு காரணம், உளவுத்துறையால் திமுக தலைமைக்கு அளிக்கப்பட்ட ரிப்போர்ட் தான் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, விஜய் பரந்தூர் சென்ற பிறகுதான், அந்த விவகாரமே தேசிய அளவில் பேசுபொருளானது. நான் உங்களோடு உறுதியாக நிற்பேன என அவர் அங்கு பேசியதும், பரந்தூர் மக்களின் போராட்டம் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆனது. இந்த தகவலும் திமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், விஜய் அடுத்ததாக வேங்கைவயலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதனால் அலெர்ட் ஆன திமுக தலைமை, இந்த விவகாரம் அரசுக்கு மேலும் தலைவலியை கொடுக்கும் என்பதால், இனி காத்திருக்க வேண்டாம், வேங்கை வயல் விவகாரத்தை உடனே முடியுங்கள், விஜய் அங்கு செல்வதற்கு முன்பாக அனைத்து பிரச்னைகளும் அடங்கிப்போய் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக சொல்லபடுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரு ஆண்டே உள்ள நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சில விவகாரங்களில், உடனடியாக நடவடிக்கை எடுக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது விஜய்யின் தேர்தல் வியூகத்தைக் கண்டு தி.மு.க.வே திக்குமுக்காடி வருகிறது. உதாரணத்திற்கு விஜய் பரந்தூக்கு சென்ற பிறகுதான் அமைச்சர்கள் விளக்கம் கொடுத்தனர். ஏன் தமிழக அரசு சார்பில்கூட தெளிவான நீண்ட விளக்கம் கொடுக்கப்பட்டது. ’’ என்றனர்.
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது ‘பழம் நழுவி பாலில் விழ வேண்டும்’ என விஜயகாந்த்தை மனதில் வைத்துப் பேசினார் கலைஞர். ஆனால், அந்தப் பழம் அ.தி.மு.க.வின் தட்டில் விழுந்து அக்கட்சியை அரியணையில் அமர்த்தியது. இதே நிலை விஜய்யால் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு வந்துவிடுமோ என்ற அச்சம் அக்கட்சிக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது!