குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் விருந்தை த.வெ.க. புறக்கணித்திருப்பதுதான் தமிழகத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தினவிழாவின்போது ஆளுநர் சார்பில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து என்பது அளிக்கப்படும். அந்த வகையில் இன்று குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் ஆர்என் ரவி தனது ஆளுநர் மாளிகையில் இன்று மாலையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் அறிவித்தன. அதன்படி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருக்கிறது. அதேபோல் தமிழக அரசு சார்பிலும் தேநீர் விருந்து புறக்கணிப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சுதந்திர தினவிழா தேநீர் விருந்தை கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உள்பட ஆளும் கட்சியினர் பங்கேற்றனர். இது விமர்சனத்துக்கு உள்ளானதால் இந்தமுறை திமுகவும் புறக்கணித்துள்ளது. இதற்கிடையே தான் தமிழக வெற்றிக் கழகத்துக்கு முதல் முறையாக தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் நடிகர் விஜய் அல்லது அவரது கட்சியினர் தேநீர் விருந்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி நடத்தும் இன்றைய தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. தவெக சார்பில் இன்று யாரும் அந்த தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தனது முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஒன்று என பேசியிருந்தார். ஆளுநர் பதவி தேவையில்லை அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கும் அந்த பதவியை நீக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். அதன்பிறகு கடந்த மாதம் ஆளுநர் ஆர்என் ரவியை நடிகர் விஜய் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, ஃபெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். இப்போது மீண்டும் ஆளுநர் ஆர்என் ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளார்.