ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவினை அறிவிப்போம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று திருமகன் ஈவெரா எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றார். இதன்பின் திடீரென மாரடைப்பால் திருமகன் ஈவெரா உயிரிழந்ததால், 2023ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திருமகன் ஈவெரா-வின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த டிசம்பர் மாதம் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பிரச்சனையால் காலமான நிலையில், மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி டிச.5ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்பட்ட போது, இம்முறை திமுகவே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

இவர் ஏற்கனவே 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர். இதனால் இம்முறையும் சந்திரகுமார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கேற்ப நேற்று மாலை நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிற கட்சிகளிடம் பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது ஓபிஎஸ் பாஜக தலைமையிலான கூட்டணி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ், குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை பெற்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது ஓபிஎஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போதும், கடைசி நேரத்தில் விலகி கொள்வதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal