திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி சென்னை அதிமுக அலுவலகத்தில் பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதற்கான ஏற்பாடுகளை ராஜ்சத்தியன் தலைமையிலான அ.தி.மு.க.வின் ஐ.டி.விங் செய்திருந்தது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

யார் அந்த சார்? என்ற கேள்வியோடு அதிமுக சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண் நிர்வாகிகளுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிசாமி: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பது போல் இந்த விடியா ஆட்சி அமைந்த நாள் முதலே, நாள் ஒரு பாலியல் வன்கொடுமை ,பொழுதொரு கற்பழிப்பு சம்பவங்கள் என தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை நீடிக்கிறது.

பெண்களிடம் தீமை புரிபவர்களை தங்கள் கட்சியிலேயே “அனுதாபி” களாக வைத்துக்கொண்டு, அவர்களுக்கு புகலிடமும் அளித்துவரும் திமுக இந்நாட்டின் சாபக்கேடு.

இனியும் இந்த மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியை நம்பி எந்தப் பயனும் இல்லை, தமிழ்நாட்டுப் பெண்கள், நீங்கள் எந்த வயதினர் ஆனாலும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நீடித்து வருகிறது. ஆகவே இன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், Pepper Spray, SOS alarm அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் பெட்டகத்தை மகளிர்க்கு வழங்கியதோடு, பாதுகாப்பற்ற இந்த ஆட்சியில் பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள இதுபோன்ற உபகரணங்களை எப்போதும் உடன் வைத்துக்கொள்ளுமாறும் ஒரு தந்தையாக உங்களிடத்தில் கேட்டுக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

சமீபகாலமாக அ.தி.மு.க. ஐ.டி.விங்வின் செயல்பாடுகள் தி.மு.க.வையே திக்குமுக்காட வைக்கும் வகையில் உள்ளது. அதற்கு உதாரணம்தான் அண்ணாமலையே அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்கை பாராட்டினார்.

அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் மாநிலச் செயலாளராக இருக்கும் ராஜ் சத்தியன் தலைமையிலான டீமில் உள்ளவர்களின் செயல்பாடுகள் வியக்க தக்க வகையில் இருக்கிறது. ‘யார் அந்த சார்’ என்ற வாசகம் முதல்வர் மு.க.ஸ்டாலினையே திக்குமுக்காட வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று பெண்களுக்கு பெப்ப ஸ்பிரே வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளையும், யுக்திகளையும் அ.தி.மு.க. ஐ.டி.விங்தான் செய்திருந்தது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் பாய்ச்சல் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal