தமிழக சட்டசபையில் மரபை மீறிய தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநில சுற்றுசூழல் அணி தலைவருமான பூங்கோதை ஆலடி அருணா, நாடாளுமன்ற உறுப்பினர் ராணி, துணைச் செயலாளர் கனிமொழி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநில சுற்றுசூழல் அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா ஆளுநரைக் கண்டித்து ஆவேசமாக பேசினார். அவர் பேசும்போது, ‘‘ இந்தியாவின் கூட்டாச்சி அரசியல் கட்டமைப்பை கடந்த 75 ஆண்டுகளாக பாதுகாக்கும் ஒரே இயக்கம் திமுக!

மக்களின் மன்றமான சட்டமன்றத்தின் மரபை மதிக்காத ஆளுநர் ஜனநாயகத்தின் சாபக்கேடு! தமிழக மக்களுக்கு மறைந்த தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கூடுதல் உரிமைகளை பெற்றுத்தர போராடினார்.

அதற்கு முத்தாய்ப்பான ஒரே உதாரணம்… இந்தியாவில் சுதந்திர நாள் அன்று தேசியகொடியை மாநில முதல்வர்கள் ஏற்றுவதற்கு வித்திட்டுவர் கலைஞர். அவர் வழியில் மாநில உரிமைகளை பாதுகாத்திட பாசிச பாஜகவை எதிர்த்து தொடர்ந்து முதலாவதாக குரல் கொடுக்கும் முன்னனியில் இருக்கும் ஒரே தலைவர் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மட்டும்தான்.

பா.ஜ.க.வில் இருந்து ஒருவரைக் கூட சட்டமன்றத்தில் நுழையாமல் தடுத்து, நம் முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று வருகின்ற 2026 தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் நமது கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்போம்’’ என்று முழங்கினார் பூங்கோதை ஆலடி அருணா. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவின் பேச்சைக் கேட்ட உடன் பிறப்புக்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

தென்காசி மாவட்ட உடன் பிறப்புக்களின் திடீர் உற்சாகம் குறித்து நடுநிலையான சீனியர் உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நடக்கும் உள்குத்துக்களை பற்றி நாங்கள் சொல்ல வேண்டாம். தலைமைக்கே அது குறித்து நன்றாக தெரியும். தமிழகத்தில் நெல்லை, தென்காசி மாவட்டத்தில்தான் உள்குத்துக்கள் அதிகம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க. தோல்வியுற்றதற்கு காரணம் தி.மு.க.வில் நடந்த உள்குத்து அரசியல்தான். பூங்கோதை ஆலடி அருணா அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் இங்குள்ள அடிமட்ட உடன¢பிறப்புக்களைக் கூட அரவணைத்துச் சென்றார். அவர்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்தார்.

ஆனால், தற்போது நடக்கும் கோஷ்டி அரசியலில் சிக்கித் தவிக்கிறது தென்காசி மாவட்டம். இந்த நிலையில்தான் தி.மு.க.வின் நிகழ்வுகளுக்குக்கூட பூங்கோதை ஆலடி அருணாவை சரியாக அழைக்காமல் புறக்கணிப்பு செய்தனர் முக்கிய நிர்வாகிகள். இந்த நிலையில்தான் ஆளுநரைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பூங்கோதை ஆலடி அருணா கலந்துகொண்டது, எங்களை மாதிரி நடுநிலையான உடன் பிறப்புக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தளவில் கோஷ்டி பூசல் இல்லாமல் தி.மு.க. தலைமை பார்த்துக்கொள்ள வேண்டும். பூங்கோதையைப் பொறுத்தளவில் அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நலத்திட்ட உதவிகளிலும் சரி, தொண்டர்களை அரவணைப்பதிலும் சரி அவரை குறைச் சொல்ல முடியாது. சமீபகாலமாக மேடையில் தோன்றமல் இருந்து, தற்போது ஆளுநரை எதிர்த்து கம்பீரமாக கர்ஜித்திருப்பது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றனர்.

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் தி.மு.க.விற்கு மிகவும் சவாலாக இருக்கும். எனவே உள்குத்து அரசியலுக்கு முடிவுகட்டி, உண்மையான உடன் பிறப்புக்களின் எண்ணவோட்டை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் தென்காசி மாவட்ட நடுநிலையான உடன் பிறப்புக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal