‘‘தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன், மொபைல்போனில் சார் ஒருவரிடம் பேசினார்’’ என சென்னை அண்ணா பல்கலை மாணவி, சிறப்பு புலனாய்வு குழுவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மாணவி போலீசாரிடம் அளித்த புகாரில், ஞானசேகரன், மொபைல்போனில் பேசும்போது சார் என்று மூன்றாம் நபரை குறிப்பிட்டு இருக்கிறார். அவர் யார் என தெரியவில்லை என்று தெரிவித்து இருந்தார். இந்த வழக்கில் ஞானசேகரன் தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து ‘ யார் அந்த சார்’ என எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழு, அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியது. குழுவினரிடம் மாணவி கூறியதாக வெளியாகி உள்ள தகவல், ‘‘சார் எனக்கூறி ஒருவரிடம் ஞானசேகரன் பேசினார். மொபைல்போன் அழைப்பில் ‘மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன்’ என ஞானசேகரன் யாருடனோ பேசினார் ‘ என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போனில் இருந்த பழைய வீடியோவில் ஞானசேகரனுடன் திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் உள்ளதாக கூறப்படுகிறது. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய அந்த நபரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஞானசேகரன் வீட்டில் இன்று மதியம் (ஜன.,04) சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். அதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய பயன்படுத்திய லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.