முதல் அரசியல் மாநாடு… அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா… ஆளுநர் சந்திப்பு… என விஜய்யின் ஒவ்வொரு அரசியல் மூவ்களும் விஸ்வரூபம் எடுப்பதால், ஆளும் தரப்பு அச்சத்தில் காவல்துறை மூலமாக முட்டுக்கட்டை போடுவதாக த.வெ.க.வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினியரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாணவிகளுக்கு தனது கைப்பட கடிதம் எழுதியிருந்தார். அதில், “கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்” என்று கூறியிருந்தார். விஜய் எழுதிய இந்த கடிதம் நேற்று சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக தவெவினரால் பகிரப்பட்டது. அதேபோல, சென்னையிலும் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரமாக தவெகவினர் வழங்கினர்.

அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக தவெகவினரை போலீசார் கைது செய்து சில மணி நேரம் கழித்து விடுதலை செய்தனர். இதற்கிடையே விஜய் எழுதிய கடித நகலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் மன்னார்குடி நகர ஒருங்கிணைப்பு குழு சார்பில் பேருந்து நிலையம், கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட நான்கு இடங்களில் பிளக்ஸ் பேனர்களாக அச்சிட்டு வைத்திருந்தனர்.

இதனை அறிந்த மன்னார்குடி நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உரிய அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி அகற்றக் கூறினர். தவெகவினரை அழைத்தே அந்த பிளெக்ஸ் பேனர்களை அவிழ்க்க வைத்தனர். முன்னதாக அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் ரவியை தவெக விஜய் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கடுமையாக மோசம் அடைந்து வருவதாகவும், அதன் சமீபத்திய வெளிப்பாடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் தாக்குதல் சம்பவத்தையும் குறிப்பிட்டு இவை தொடர்பாக ஆளுநர் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

சட்டம் & ஒழுங்கைக் காரணம் காட்டி நோட்டீஸ் கொடுப்பதைக் கூட காவல்துறையினர் தடுத்து கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்கிறார்கள் த.வெ.க.வினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal