அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ.2,000 வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் ரூ.3,000 கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு ரூ.1,000 மட்டுமே வழங்கியது. இதனால், 60 சதவீதம் பேருக்கு மட்டுமே பணம் கிடைத்தது. இந்த ஆண்டும் அதேபோல ரூ.1,000 கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் திமுக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த ஆண்டும் ரூ.2,000 தர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளது மக்களின் எதிர்பார்ப்பை உறுதி செய்கிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக வெகுவிமரிசையாக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். எனவே பொதுமக்கள் இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் என்பது தொடங்கப்பட்டது. இது கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட நேரத்திலிருந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த திட்டம் விரிவடைந்து கடந்த சில வருடங்களாக பொங்கல் பரிசுதொகுப்புடன் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு 2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு என்னென்ன வழங்கப்படும் என்பதை அறிவித்துள்ளது. அதில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு, இலவச வேட்டி சேலைகள் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணமாக ரூ.1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறாததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறாதது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிடப்பட்டதாகவும், பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்து செலவு செய்யப்பட்டதாகவும், பேரிடர் நிவாரண நிதியாக ரூ.276 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.37 கோடி மட்டுமே மத்திய அரசு கொடுத்ததாகவும், எனவே இந்த நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றதாக கூறியுள்ளார்.
அதேபோல், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது எனவும், இதற்கான நல்ல சூழல் விரைவில் உருவாகும் என்றும், மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ஐ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆனால், மகளிர் உரிமைத் தொகையும் தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்கவில்லை. ஏன்? தகுதியான குடும்பத்தினர் கூட இந்த உரிமைத் தொகையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.