2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை மனம் திறந்து பதில் அளித்திருக்கிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் பேசிய அவர், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை சில அரசியல் தலைவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்த திட்டத்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. 2029-ஆம் ஆண்டுக்கு பிறகு நடக்கக் கூடிய நாடாளுமன்ற தேர்தலின் காலம் எவ்வளவு ஆண்டுகள் இருக்குமோ, அது தான் சட்டமன்றத்தின் காலம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் 4 தேர்தல்கள் ஒரே நாடு ஒரே தேர்தல்தான். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கலைப்பினால்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தள்ளிப்போனது. 2024 நாடாளுமன்ற தேர்தலிலே மக்கள் மும்முனை போட்டியை பார்த்துள்ளனர்.
2026ல் ஒரு புதிய அரசியல் களத்தை பார்க்கப்போகிறோம். திராவிடக் கட்சிகள் தனியாக ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஒரு புது விதமான அரசியலை தமிழகத்தில் கொண்டு வர மக்கள் தயாராக உள்ளனர்.
திராவிடக் கட்சி அல்லாத ஒரு கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு இருக்கிறது. பாஜகவிடம் வலிமையான கூட்டணி இருக்கிறது. அதிமுக கூட்டணி குறித்து காலமும் சூழலும் முடிவு செய்யும். கூட்டணி இல்லை என்று மறுக்கவில்லை’’ என பேசியுள்ளார்.
‘தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்றாலும், அ.தி.மு.க. ஆட்சியமைக்க வேண்டும் என்றாலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும்’ என டி.டி.வி.தினகரன் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.