கஞ்சா வழக்கில் யூடியுபர் சங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் மீண்டும் அவரை தேனி போலீசார் சென்னை தேனாம்பேட்டையில் வைத்து கைது செய்தனர்.
பெண் காவலர்களை அவதூறாக பேசி பேட்டி கொடுத்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம் தேதி தேனியில் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கும் அப்போது பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை கமிஷனர் உத்தரவிட்டார்.
அப்போது யூடியூபர் சங்கர் தேனி மாவட்டம் பூதிப்புரம் சொகுசு விடுதியில் தங்கியிருந்த போது பழனி செட்டிபட்டி போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்ற போது அவரது காரில் கஞ்சா வைத்திருந்த நிலையில் அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யபட்டு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
சவுக்கு சங்கர் மீது பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனைத்தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரை ஜாமீனில் வெளியே வந்தார். மேலும், மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்குசங்கருக்கு கடந்த ஜூலை – 29ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு சங்கர் முறையாக ஆஜராகாததால் சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கரை சென்னை தேனாம்பேட்டையில் வைத்து தேனி போலீசார் மீண்டும் கைது செய்தனர். இதனால் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.