‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கலாம்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா லோக்சபாவில் இன்று (டிச.,17) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆரம்ப நிலையில் இருந்தே, எதிர்த்து வருகிறோம். இந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

திரிணமுல் காங்., எம்.பி., தர்மேந்திர யாதவ்

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கே எதிரானது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா. இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க சதி நடக்கிறது.

திரிணமுல் காங்., எம்.பி., கல்யாண் பானர்ஜி

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஏற்க முடியாது. மசோதா தேர்தல் சீர்திருத்தம் அல்ல, ஒருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக உள்ளது. அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்க முடியுமா?

தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு

ஒரு அரசை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யும் முறை, வாக்காளர்களுக்கு உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பார்லி., கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதே தி.மு.க.,வின் நிலைப்பாடு. அவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் மசோதாவை எப்படி அமல்படுத்த முடியும்.

இதற்கிடையே, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘மசோதாக்கள் மீதான விவாதம் தனித்தனியாக நடைபெறும். அவையில் பேச அனைத்து கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கலாம். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லோக்சபாவில் நடந்த மின்னணு ஓட்டெடுப்பை அடுத்து மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal