இன்றைய காலகட்டத்தில் உண்மையான நட்பை பார்ப்பது மிகமிக அபூர்வம். ஆனால், நட்பை பிரித்துவிடுவார்கள் என்பால், அவிநாசி அருகே கல்லூரி மாணவிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவிநாசியைச் சேர்ந்த மாணவிகள் அவந்திகா (19), மோனிகா(19). இவர்கள் இருவரும் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தனர். இருவரும் பகுதி நேரமாக பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்தும் வந்தனர். இந்நிலையில், தோழியான அவந்திகா வீட்டுக்கு மோனிகா நேற்று (டிச. 10) மாலை சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் மோனிகா அறைக்குள் சென்றபிறகு, நீண்ட நேரமாகியும் அவந்திகா அறைக்கதவு திறக்காததால், சந்தேகமடைந்து அருகில் இருந்தவர் பார்த்த போது, இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்தனர்.
போலீஸார் விசாரணையில், “அவந்திகா மற்றும் மோனிகா இருவரும் மிகுந்த நட்புடன் இருந்து வந்துள்ளனர். எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வந்துள்ளனர். படிக்கும்போது ஒன்றாக சேர்ந்த படித்துள்ளனர். ஆனால் அவர்களது பெற்றோர் ஒன்றாக இருந்து படித்தால் சரியாக படிக்கமாட்டீர்கள், தனித்தனியாக படியுங்கள் என்று தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் தங்கள் நட்பை பிரித்துவிடுவார்கள் என்று பயந்து இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது.” தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று (டிச.11) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.