அதிகாரத்தில் இல்லையென்றால் காணாமல் போய்விடுவார்கள் என்றும், அண்ணாமலை விளம்பரத்திற்காக விஜய்யை விமர்சித்து பேசி இருக்கிறார் என்றும் தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் விஜய், இது தான் தனது கடைசி படம் என்றும், 2026 சட்டசபை தேர்தல் தான் தனது இலக்கு என்றும் ஏற்கனவே அறிவித்து இருந்தார். தொடர்ந்து கட்சி கொள்கை, கொடி, பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.

மேலும் அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் விஜய் வெளிப்படையாகவே அறிவித்தார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் இதனை பேசினார். தொடர்ந்து படத்தில் நடித்துக்கொண்டே, கட்சிகளில் நிர்வாகிகளை நியமிப்பது போன்ற பணிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் லண்டலின் படிப்பை முடித்துவிட்டு நேற்று தமிழகம் திரும்பிய அண்ணாமலை விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றார்.

அதே சமயத்தில் விஜய்யும் திராவிட கொள்கையை தான் பின்பற்ற போவதாக சொல்லியிருக்கிறார் என்றும், புதிதாக எதையும் சொல்லவில்லை என்றும் விமர்சித்தார். மேலும் விஜய்யின் பேச்சும் திராவிட கட்சி கொள்கைகளோடு தான் ஒத்து போகிறது. அரசியல் என்பது தினம் தினம் மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் விஜய் கட்சி மாநாட்டில் பேசிய பிறகு எப்போதாவது வெளியில் வந்திருக்கிறாரா? எத்தனை முறை வெளியில் வந்திருக்கிறார் என்று அண்ணாமலை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழக செய்தி தொடர்பாளர் ரமேஷ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழக கொள்கைகள் குறித்து திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சார விளம்பர பேச்சுகள், முற்றிலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கருத்தாகும். தமிழக வெற்றிக் கழகம் மதச்சார்பற்ற சமூக நீதி என்ற கொள்கையை முன்வைத்து பயணிக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் மதச் சார்பற்ற சமூக நீதி என்ற கொள்கையினை முன்வைத்து பயணிக்கிறது.

திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் என்ற எந்த அடையாளதிற்குள்ளாகவும் சுருங்க விரும்பவில்லை என தலைவர் விஜய் கொள்கை பிரகடன மாநாட்டில் அறிவித்த பின்னரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புரிதல் இன்றி பேசியிருப்பது ஒரு விளம்பர யுத்தியாக, நீண்ட நாள் கழித்து தமிழ்நாடு திரும்பியுள்ள அவருக்கு ஒரு வெளிச்சம் தேடும் முயற்சியாகவே பார்க்கிறோம். தமிழக மக்கள் எல்லா வகையிலான உணவையும் உண்பார்களே தவிர, ஒரு காலமும் மதவாதம் எனும் நஞ்சினை உண்ண மாட்டார்கள்.

ஒன்றிய ஆட்சியில் பாஜக அதிகாரத்தில் இல்லையென்றால் தமிழ் நாட்டில் இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடுவார்கள். பன்முக தன்மை கொண்ட தேசத்தில் குறிப்பாக அதனை பெரிதும் போற்றும் தமிழக மக்கள் ஒற்றை உணவு போல “ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு” போன்ற திட்டமிடப்பட்ட பன்முக சிதைவுகளை ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்கள்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைத்து அறுசுவை உணவுடன் எங்கள் கொள்கை எதிரியான பாஜகவிற்கும் அரசியல் எதிரியான திமுகவிற்கும் விருந்து வைப்பார்கள்’’இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal