அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, கட்சியில் நடத்தப்பட்ட நாடகம் நாற்பது நாட்களில் முடிவுக்கு வந்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தொடங்கிவைத்த காரணத்தால் அதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே வகித்து வந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் பொறுப்புகளும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பதவி பறிக்கப்பட்ட 40 நாள்களில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு, அதே பதவியை வழங்கியிருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவராக இருந்தாலும், அவர் அதிமுகவில் முதன்முதலாகப் பதவி பெற்றது தலைநகரான சென்னையில்தான். அடிப்படையில் வழக்கறிஞரான தளவாய் சுந்தரத்துக்கு தென் சென்னை வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பு 1989-ம் ஆண்டு கிடைத்தது.
தொடர்ந்து வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு உயர்ந்தார். பின்னர் சசிகலா குடும்பத்துடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, உயர்நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞராக உயர்ந்தார். 1996-ல் ராஜ்யசாபா எம்.பியாகவும் அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, 2001-ல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானதோடு, பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். தொடந்து, பல துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல், கட்சியிலும், அம்மா பேரவை மாநிலச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என பத்து ஆண்டுகளில் விறுவிறுவென உச்சத்துக்குப் போனார்.
பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால், சசிகலா குடும்பம் ஓரம் கட்டப்பட்டபோது, தளவாய் சுந்தரமும் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பிறகு மீண்டும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் என கட்சி செல்வாக்குமிக்கவராக மாறினார்.
ஆனால், 2016 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக தோல்வியைத்தழுவ மீண்டும் அவரின் பதவி பறிபோனது. தர்மயுத்த காலத்தில், சசிகலா, டிடிவி பக்கம் நின்றவருக்கு சசிகலா டெல்லி சிறப்புப் பிரதிநிதி பொறுப்பை வழங்கினார். பின்னர் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடிக்க இ.பி.எஸ் பக்கம் நின்று, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனார். தொடர்ந்து, இ.பி.எஸ்ஸின் குட் புக்கில் இடம் பிடித்து அமைப்புச் செயலாளராகவும் ஆனார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகவும் வெற்றி பெற்றார். தென் மாவட்டங்களில் இ.பி.எஸ்ஸின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகவும் விளங்கினார். இந்த நிலையில்தான், கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தொடங்கிவைத்த காரணத்தால், அ.தி.மு.கவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் தளவாய் சுந்தரம்.
அதையடுத்து, மேற்கு மாவட்டச் செயலாளர் ஜான் தங்கத்திடமே கிழக்கு மாவட்டப் பொறுப்பையும் சேர்த்து ஒப்படைத்தது கட்சித் தலைமை. இந்தநிலையில் கடந்த 18ம் தேதி மீண்டும் அவரைக் கட்சியில் இணைத்து, அவர் வகித்த பொறுப்புகளையும் வழங்கி உத்தரவிட்டிருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமிக்கு 40 நாள்களுக்குள் எப்படி இந்த மனமாற்றம் ஏற்பட்டது என கட்சியின் சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், ‘‘நாற்பது நாள்கள் எல்லாம் இல்லை. அவர் நீக்கப்பட்டு இரண்டு நாள்களிலேயே அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. அவர் இப்போது மட்டுமல்ல, தொடர்ச்சியாக தொகுதி எம்.எல்.ஏ என்கிற அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் பேரணியைத் தொடங்கி வைத்துக்கொண்டுதான் இருக்கிறார். அதை எடப்பாடியாருக்கு தெரிவித்து சமாதானமும் செய்துவிட்டார். நீக்கிவிட்டு உடனடியாக மீண்டும் சேர்த்தால் சரியாக இருக்காது என்பதால்தான், கொஞ்சம் இடைவெளிவிட்டு இப்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். (அப்போது பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தத்தான் தளாவாயை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்)
தளவாய் மா.செவாக இல்லாவிட்டாலும், கன்னியாகுமரி அதிமுகவில் அவர்தான் அதிகாரம் செய்துவந்தார். ஜான் தங்கமே இவரிடம்தான் அனைத்து விஷயங்களையும் கேட்டுச் செய்துகொண்டிருந்தார். நேற்று அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்கிற விஜய்யின் அறிவிப்பு வெளியானது. அதை டைவர்ட் செய்யும் நோக்கத்திலேயே அவர் மீண்டும் இணைக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது.
எல்லாவற்றையும்தாண்டி, மீண்டும் பாஜகவுடன் கூட்டணிக்குப் போகலாமா என்றே இ.பி.எஸ் யோசிக்க ஆரம்பித்துவிட்டார். தவிர, விஜய்யும் அ.தி.மு.க.வில் முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில்தான், தளவாய் கலந்துகொண்டது எல்லாம் பெரிய விஷயமில்லை என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டால் தளவாய் வேறு ஏதாவது குட்டையைக் குழப்பினால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே அறிந்துதான் உடனடியாக இணைப்பு அறிவிப்பை அறிவித்துவிட்டார்’’ என்றார்கள்