மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சுமார் 150 நாட்களாக செயல்பட்ட விலையில்லா விருந்தகம் மதுரை மாநகராட்சியால் அகற்றப்பட்டதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரையில் தவெக சார்பாக விலையில்லா விருந்தகம் மதுரை மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் தலைமையில் நாள் ஒன்றுக்கு சுமார் 250க்கும் மேற்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடங்கி வைத்த விலையில்லா விருந்தகம் மூலம் பல மாவட்டங்களில் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

அந்த வகையில், மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நேதாஜி ரோடு பகுதியில் மத்திய தொகுதி நிர்வாகிகள் இந்த தினசரி விலையில்லா விருந்தகம் மூலம் ஏழை எளிய மற்றும் நலிவுற்ற மக்களுக்கு உணவு வழங்கி வந்தனர். இந்த நிலையில் இந்த விருந்தகம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றைய தினம் அகற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் குழப்பம் அடைந்த தவெக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வழக்கம் போல் இன்று மதிய உணவிற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனை அறிந்த நிர்வாகிகள் உடனடியாக உணவு தயார் செய்து தற்காலிக பந்தல் அமைத்து உணவு விநியோகம் செய்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal