அ.தி.மு.க.வில் மிகவும் சீனியரான செங்கோட்டையன் தற்போது ஒதுங்கியே இருப்பதாகவும், கள ஆய்வுக்குழுவில் கூட அவரது பெயர் இடம் பெறாதது பல்வேறு வியூகங்களை கிளப்பியிருக்கிறது.
அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்-பி.வேலுமணி, தங்கமணி, டி.ஜெயக்குமார், செம்மலை, சி.வி.சண்முகம், வளர்மதி, வரகூர் அருணாசலம் ஆகிய10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவில் 2 – & 2 பேராக தனித்தனியாகப் பிரிந்து, மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர்கள் இரண்டிரண்டு பேராக பிரிந்து, கள ஆய்வு செய்ய வேண்டிய மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையுடன் மா.செ.க்கள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை தர எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். இந்த 10 பேர் கொண்ட குழுவில் அ.தி.மு.க.வில் சீனியரான செங்கோட்டையன் மிஸ்ஸாகியிருப்பதுதான் பல்வேறு வியூகங்களை எழுப்பியிருக்கிறது.
இது பற்றி அ.தி.மு.க.வில் எம்.ஜி-.ஆர். காலத்து மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘‘சார், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி-.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு தேர்தல் வியூகங்கள் மற்றும் பிரச்சார வியூகங்களை செங்கோட்டையன்தான் வகுத்துக்கொடுப்பார். அந்தளவிற்கு இரண்டு தலைவர்களும் செங்கோட்டையன் மீது நம்பிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில்தான் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலா சிறை செல்வதற்கு முன்பு செங்கோட்டையனை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க முடிவு செய்தார். ஆனால், எம்.எல்.ஏ.க்கள் ‘கேட்டதை’ செங்கோட்டையனால் ‘கொடுக்க’ முடியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி இரண்டு மணி நேரத்தில் ‘ரெடி’ செய்து கொடுத்தார். அதனால்தான், எடப்பாடியால் முதல்வர் நாற்காலியில் அமர முடிந்தது.
கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, அ.தி.மு.க. ஒற்றுமையுடன் இருக்கவும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியமைக்கவும் பத்திரிகையாளர்களை அவ்வப்போது சந்தித்ததோடு, செங்கோட்டையனின் முக்கியத்துவம் என்ன என்பது அப்போதுதான் எல்லோருக்கு புரிந்தது.
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செங்கோட்டையனை புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தவிர, ஈரோட்டில் செங்கோட்டையனுக்கும், எடப்பாடிக்கு உறவுக்கார அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தமாம். அவரும் செங்கோட்டையனை பற்றி தப்புத் தப்பாக போட்டுக்கொடுத்து ஓரம் கட்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. செங்கோட்டையன் தரப்போ, ‘இல்லீங்க அண்ணன்தான் ஒதுங்கி இருக்கிறார்… எடப்பாடி பழனிசாமி எங்க அண்ணனை ஓரங்கட்ட முடியுமா?’ என்கிறார்கள்.
இதற்கிடையில், தமிழக அரசியல் களத்தில் மிகவும் சீனியரான செங்கோட்டையன் சைலன்ட்டாக இருப்பதை த.வெ.க. தலைவர் விஜய்யும், சசிகலாவும் கூர்ந்து கவனித்து வருவதோடு தங்கள் பக்கம் இழுக்கவும் காய்நகர்த்துகிறார்கள்’’ என்றனர்.
நெருப்பில்லாமல் புகையுமா..?