“அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறுதான் கூட்டணி அமைக்கப்படும். ஒத்த கருத்துகளை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார். யார் யார் எல்லாம் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைப்போம்.” என திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

2026 சட்டசபை தேர்தல் களம் இப்போதே பரபரக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம்பெறும் என்பது பெரும் கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில், பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா என்பதை எடப்பாடி பழனிசாமி மறுக்காமல் மழுப்பலாக பதில் அளித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என மாநாட்டில் அறிவித்துள்ளார் விஜய். இதனால், தமிழக அரசியலில் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என விவாதங்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக சீமான் கட்சிக்கும், விஜய் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

அதிமுகவும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி பணிகளை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அண்மையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்மையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது அதிமுக தலைமை. தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக, பாமகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி கதவை திறந்து வைப்பது, மூடுவது எல்லாம் கிடையாது. அதெல்லாம் மற்ற கட்சிகளில் தான். அதிமுகவை பொறுத்தவரை ஒத்த கருத்து கொண்ட கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து லஞ்ச லாவண்யம் கொண்ட ஆட்சியை அகற்றுவதுதான் எங்கள் நோக்கம்.

ஒத்த கருத்துகளை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார். யார் யார் எல்லாம் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைப்போம். ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் என்பது அவ்வப்போது வரும். அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறுதான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி சூழல் தெரியவரும். அதற்கு முன்பு என்ன சொன்னாலும் அது நிற்காது” எனக் கூறி இருக்கிறார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்றஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘2026 சட்டசபை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படும், மாற்றுக் கட்சி தலைவர்களை தேவையின்றி விமர்சிக்க வேண்டாம்’’ எனக் கூறினார்.

பா.ஜ.க.வுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமியின் திடீர் மனமாற்றத்தின் பின்னணி குறித்து ‘மேலிட’ வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சார், எடப்பாடியின் நிழலாக வலம் வருபவரின் கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வாரமாக சோதனை நடத்தினார்கள். இதில் கோடிக்கணக்கில் பணமும், ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள். ‘மேலிடத்துடன்’ தொடர்ச்சியாக பகைத்தால், எடப்பாடியாரின் நிழலை வைத்தே எடப்பாடிக்கு பெரும் சிக்கல் ஏற்படும். இந்த நிலையில்தான், பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து மாற்று மனநிலைக்கு எடப்பாடி வந்துவிட்டார்’’ என்கிறார்கள்’’ என்றவர்கள், ‘‘இதுநாள் வரை பா.ஜ.க.வுடன் கூட்டணியே கிடையாது என்றவர், தேர்தல் நெருங்கும் சமயத்தல் பார்த்துக்கொள்ளலாம்’’ என பேசியிருப்பதன் பின்னணி நிழலை வளைத்ததுதான்’’ என்றார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal