பெருந்துறை தொகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்காக இருக்கும் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் சீட் வாங்கிவிடக் கூடாது என்பதற்காக அமைச்சர் முத்துசாமி உள்ளடி வேலை பார்ப்பது வெட்டவெளிச்சாமியிருப்பதுதான் உடன் பிறப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பாவதற்கு முன்பே தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியுள்ளது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த தொகுதியை திமுகவினருக்கு ஒதுக்க கூடாது என்பதற்காக முத்துசாமியே உள்ளடி வேலைகளை பார்த்து வருவதாக ஈரோடு திமுக வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
2026 தேர்தலுக்கான வேலைகளில் திமுக தற்போதே மும்முரமாக இறங்கியுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி பார்வையாளராக டாக்டர் மகேந்திரனை அறிமுகப்படுத்திய அமைச்சர் முத்துசாமி, அதற்கு பிறகு பேசிய விஷயங்கள் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறை தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம், ஆனால் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படலாம். அவ்வாறு ஒதுக்கப்படும் பட்சத்தில் நீங்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த முறை எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என காத்திருந்த நிர்வாகிகளுக்கு அவரது பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016ல் திமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.சாமி அதிமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலத்திடம் தோல்வியடைந்தார். 2021ல் இந்த தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே.கே.சி பாலு அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இந்த முறையும் கூட்டணி கட்சிக்கே ஒதுக்கி விடுவார்களோ என திமுகவினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.
ஆனால் பெருந்துறை தொகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்குவதற்கான வேலையை முத்துசாமி செய்து வருவதாக சொல்கின்றனர். அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முத்துசாமி, அதன்பிறகு கட்சியின் முக்கிய நபர்களை ஓரங்கட்டியதாக பேச்சு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலும் ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேச மூர்த்தியை களமிறக்க பெருமுயற்சி எடுத்தார் முத்துசாமி. ஆனால் திமுக தலைமை அதற்கு மாறாக திமுக சார்பில் பிரகாஷை வேட்பாளராக அறிவித்தது.
தற்போது பெருந்துறை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என அவர் பேசியதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. 25 ஆண்டு காலத்திற்கு மேலாக அதிமுகவில் பதவி வகித்து, திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதி சீட்டை வாங்கி விடுவாரோ என்ற பயத்தில் தான் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என நினைத்து முத்துசாமி பேசியதாக ஈரோடு திமுகவினர் மத்தியில் பேச்சு இருக்கிறது.
அ.தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தபோது, தேர்தல் வாக்குறுதிகளை பெருந்துறையில்தான் வெளியிட்டார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. 2016 சட்டமன்றத் தேர்தலில் கே.என்.நேருவை எதிர்த்து கொறடா மனோகரையும், ஐ.பெரியசாமியை எதிர்த்து நத்தம் விஸ்வநாதனையும், கே.சி.பழனிசாமியை எதிர்த்து செந்தில் பாலாஜியையும் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. ஆனால், பெருந்துறை தொகுதியை பொறுத்தவரை மீண்டும் தோப்பு வெங்கடாச்சலத்திற்கே ஒதுக்கினார். அந்தளவிற்கு எந்தக் கட்சியில் இருக்கிறோமோ அந்தக் கட்சியில் விசுவாசமாக இருக்கக்கூடியவர் தோப்பு வெங்கடாச்சலம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட ஈரோடு தொகுதியில் தி.மு.க. வாங்கிய வாக்கு சதவீதத்தைய் பார்த்தால் தி.மு.க.வில் நடக்கும் உள்ளடி வேலைகள் நன்றாக தெரியும்.
ஈரோடு திமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை தீர்க்க திமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கும் போதே நமக்கு சீட் இல்லை என சொல்வதால் நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் மெத்தனம் காட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதால், உடனடியாக திமுக தலைமை தலையிட வேண்டும் என ஈரோடு திமுக தரப்பில் இருந்து குரல் எழுந்து வருகிறது.