மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை வைத்திருந்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டார். ராயப்பேட்டையில் ஒரு வணிக வளாகத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் நடிகை மீனா. இவர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் போதை பொருள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அங்கு மீனாவிடம் சோதனையிட்ட போது அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் எனும் அதிக வீரியம் கொண்ட போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் யாரிடம், எங்கு இருந்து இந்த போதை பொருளை வாங்கினார், வேறு யாரிடமாவது போதை பொருளை விற்றுள்ளாரா போன்றவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கஞ்சா, ஹெராயின்,கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் கிடைக்கும் மெத்தபெட்டமைன் எனும் வீரியம் கொண்ட போதா பொருளும் புழங்கி வருகிறது. இது குறித்து அவ்வப்போது போலீஸார் கைது செய்தும் போதை பொருளை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.
அதிக போதையை தருவதால் பெரும்பாலான இளைஞர்கள் இந்த போதை வலையில் சிக்குகிறார்கள். இந்த மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை தயாரிக்க சூடோபெட்ரின் எனும் வேதி பொருள் உதவுகிறது. இந்த போதை பொருளை கடத்தியதாகத்தான் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில் டெல்லியில் வைத்து இவருடைய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த போதை பொருள் அதிக விலைக்கு விற்பனையாகிறது. மேலும் இதை கடத்தினால் அதிக கமிஷனும் கிடைக்கிறது என்பதால் கடத்தல்காரர்கள் எளிதாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைக்கிறார்கள். அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நைஜீரியாவை சேர்ந்த ஜான் எஸி, மெக்கலன், அருண் ஆகிய மூவர். இவர்களில் அருண் என்பவர் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் என தெரியவந்தது.
இதையடுத்து இந்த மூவரிடம் இருந்து 2.5 கிராம் மெத்தபெட்டமைன், ஒரு லட்சம் ரொக்கம், செல்போன்கள் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு பின்னால் யாரேனும் நெட்வொர்க் உள்ளனரா என்பதை விசாரித்து வருகிறார்கள். போதை பொருள் கலாச்சாரம் சினிமா, சீரியல் நடிகர், நடிகைகள் சிலரிடமும் புழக்கத்தில் இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.