சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்க்கண்ட்டில் வரி ஏய்ப்புத் தொடர்பாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளர் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சனிக்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலத் தலைநகர் ராஞ்சி மற்றும் ஜம்ஷெட்பூரில் மொத்த ஒன்பது இடங்களில் சனிக்கிழமை காலையில் இந்த சோதனை தொடங்கியது. சிஆர்பிஎஃப் குழுவின் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவா தொடர்புடைய இடங்களிலும் இந்தச் சோதனைகள் நடந்தது. மாநிலத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் சுரங்க முறைகேடு தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) தொடர்ந்த விசாரணையுடன் இந்த சோதனை தொடர்புடையது என்று இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்த வருமானவரிச் சோதனை குறித்து மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகேஷ் சின்ஹா கூறுகையில், ‘ஜார்க்கண்டுக்கு இது ஒன்றும் புதிதில்லை. மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் ஊழியர்களின் வீடுகளில் அடிக்கடி வருமான வரிச்சோதனைகள் நடத்தப்படுகின்றன.

தேர்தலுக்கு முன்பாக வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனைகள் மூலமாக பாஜக இங்கு கால்பதிக்க நினைக்கிறது. இத்தகைய செயல்கள் மூலம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க நினைக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

இதனிடையே பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதியோ கூறுகையில், “மாநிலத்தில் ஆளுங்கட்சிகள் இந்தச் சோதனைகளை தேர்தலுடன் இணைத்துப் போசுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. வருமான வரித் துறையின் அதிகாரபூர்வ அறிக்கை வரும் வரை அவர்கள் பொறுத்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal