நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரைத்துள்ளது.
இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, பயிற்சி மையங்களில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது என பல சர்ச்சைகள் எழுந்தன. மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந் நிலையில் நீட் முறைகேடு என்று தொடரும் குற்றச்சாட்டுகள், தேர்வின் போது நடந்த மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வின் சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை அளிக்க பணிக்கப்பட்டது. இந்த குழு நீண்ட ஆய்வு நடத்தி தனது பரிந்துரைகளை மத்திய கல்வி அமைச்சகத்திடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.
அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு;
நீட் நுழைவுத்தேர்வை முடிந்தவரை ஆன்லைன் மூலம் நடத்தலாம்.
நீட் தேர்வு மையங்களை அவுட்சோர்சிங் என்ற முறையில் வழங்காமல் அதன் சொந்த தேர்வு மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்து நடத்தலாம்.
ஆன்லைன் முறை சாத்தியம் இல்லை எனும் போது, வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் தேர்வர்களுக்கு அனுப்பலாம். அவர்கள் கேள்விகளுக்கான பதில்களை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் குறிப்பிடலாம். இதன் மூலம் விடைத்தாள்கள் பலரின் கைகளுக்கு செல்வது தடுக்கப்படும் அல்லது கணிசமாக குறைக்கப்படும்.
எத்தனை முறை தேர்வில் பங்கேற்பது என்ற கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம். ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு உள்ளிட்ட நுழைவுத் தேர்வை போலவே அதிகம் பேர் நீட் தேர்வை எழுதுவதால் பல நிலைகளில் இந்த தேர்வை நடத்தலாம்.
இவ்வாறு கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.