“சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய கருத்துகளைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் ‘வெற்றிக் கொள்கைத் திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்.27) நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. கட்சியின் தலைவர் விஜய் கொடி ஏற்றினார். பின்னர் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து விஜய் பேசும் போது பல்வேறு விஷயங்களை தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார். அதில் “பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்” என்று விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்க தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “சாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று பதிவிட்டுள்ளார். விஜய்யின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வருவது கவனிக்கத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal