தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கொடியை ஏற்றி வைத்த கட்சியின் தலைவர் விஜய், பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
தமிழக அரசியலில் புதிய என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகர் விஜய், இன்று தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திக்கொண்டிருக்கிறார். மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். 2 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைவிட அதிகமான அளவில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். போடப்பட்டிருக்கும் சேர்கள் போதுமானதாக இல்லாததால், தொண்டர்கள் நின்றுக்கொண்டே மாநாட்டை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 4.30 மணியளவில் மேடையில் தோன்றிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், ரேம்ப் வாக் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது அவர்கள் வீசிய கட்சி துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டார். அந்த நேரத்தில் ரேம்ப் வாக் மேடையில் திடீரென ஒரு முன்னாள் ராணுவ வீரர் தோன்றி, விஜய்க்கு ராணுவ மரியாதை செலுத்தினார். இதனையடுத்து 101 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் விஜய் கொடியை ஏற்ற தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏற்கெனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் விவகாரத்தில் தமிழ்நாட்டில் பல சலசலப்புகள் எழுந்தன. எனவே, இம்மாநாட்டில் அப்படியான பஞ்சாயத்து ஏதும் உருவாகி விடக்கூடாது என தவெக உறுதியாக இருந்திருக்கிறது. தொடர்ந்து தொண்டர்களுடன் சேர்ந்து, விஜய் பின்வரும் வாக்கியத்தை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டார்.
“நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி மதசார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதியளிக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என உளமார உறுதி கூறுகிறேன்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
விஜய்யின் அரசியல் திமுக, அதிமுக உள்ளிட்ட அண்ணாவின் அரசியலிலிருந்து வேறுபட்டிருக்கும் என்று பேசப்படட நிலையில், “சமூகநீதி பாதையில் பயணிப்பேன்” என விஜய் உறுதிமொழி ஏற்றுகொண்டது பேசுபொருளாகியுள்ளது.