“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். அதே சமயம் பல கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாட்டுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் தவெக மாநாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உதயமாகியுள்ளன. ஆனால் மக்கள் ஆதரவைப் பெறுவது தான் முக்கியம். பல கட்சிகள் காணாமல் போயும் உள்ளன. ஒரு தயாரிப்பாளராக நான் முதலில் தயாரித்ததே விஜய் படம் தான். அந்த வகையில் நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என்றார்.

விஜய்க்கு நடிகர்கள், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு “விஜய் தைரியமாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தைரியமாக இறங்கி அடித்து நொறுக்குகிறார் என்றால் அவருக்கு இறைவன் அருள் உள்ளது.

விஜய்க்கு எனது முழு ஆதரவு எப்போதும் உண்டு. அதைப்போல என்னுடைய தந்தை ஆசியும் அவருக்கு உண்டு. ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசிர்வதிக்கிறேன்” என தெரிவித்தார்.

அதே போல் திரையுலகில் பலர் தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal