அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம்.. இவர் தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இருக்கிறார்.. தற்போது ஒரத்தநாடு எம்எல்ஏவாகவும் உள்ளார்.
2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த அப்பார்ட்மென்ட் கட்டுவதற்கு 27 கோடி ரூபாய் வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது.. பிறகு 2016ல், ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம் 27 கோடியே 90 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்த பிறகு, அமைச்சர் ஒப்புதல் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது 2 மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தார்கள்.
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டபோதுதான், பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டித்தின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பான கோப்பு 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை நிலுவையில் இருந்ததும், பிறகு 2016ல் ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம் 27 கோடியே 90 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்த பிறகு, அமைச்சர் ஒப்புதல் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்தே அமலாக்கத்துறை அதிகாரிகள் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலில் உள்ள அவரது அறைகள் மற்றும் ஒரத்தநாட்டில் உள்ள வீடு மற்றும் அவருக்கு சொந்த மான இடங்களில் சோதனை நடைபெறுவதாக தெரிகிறது… தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள இல்லத்தில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
2011-16 காலத்தில் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகிறார்கள். வைத்திலிங்கத்தை பொறுத்தவரை, ஆரம்ப காலத்தில் இருந்தே சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர்… சசிகலா சமூகத்தை சேர்ந்தவர்.. டெல்டாவை சேர்ந்தவர்.. சிறைக்குச் செல்லும் வரை, அவரின் குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவரும்கூட.
ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர்.. அதிமுகவின் 7 மாவட்டங்களுக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர்.. அதாவது ஜெ. அமைச்சரவையில் அன்றைய டாப் 5 முக்கிய தலைவர்களில் 3வது இடத்தில் இருந்தவர் வைத்திலிங்கம்.. அந்தவகையில், எடப்பாடி பழனிசாமியே, இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்திருக்கிறார். ஆனால், 2016 தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வி அடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார். அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்… அதுமட்டுமல்லாமல், தென்மண்டங்களைவிட, கொங்கு மண்டலத்தையே எடப்பாடி அரசு தூக்கி வளர்த்ததும், வைத்திலிங்கத்தின் அதிருப்திக்கு இன்னொரு காரணமானது. அப்போதிருந்தே ஓபிஎஸ்ஸின் ஆதரவாளராக இருந்து வருகிறார் வைத்திலிங்கம்.
சசிகலா பக்கம் தாவப்போவதாகவும், அதிமுக பக்கம் தாவ போவதாகவும் செய்திகள் கசிந்தாலும், இப்போதுவரை ஓபிஎஸ் பக்கமே உறுதியாக இருக்கிறார்.. பாஜகவின் தீவிர ஆதரவாளராக ஓபிஎஸ் இருந்து வரும்நிலையில், இன்று வைத்திலிங்கம் வீட்டிலேயே இந்த ரெய்டு நடப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. சென்னையில் எம்எல்ஏ ஹாஸ்டலிலும் சோதனை மேற்கொள்ள முடிவானது.. ஆனால், வைத்திலிங்கம் அங்கு இல்லாததால், அவரது உதவியாளர் இடம், வீட்டின் சாவியை பெற்றுக்கொண்டு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.. வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நடைபெற்ற அதே சமயம், அவரது மகனின் தி.நகர் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினார்கள்.. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற சோதனைகளின் போது முறைகேடு தொடர்பான, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா? என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.