“காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளை காலை கரைக்கு அருகில் வருகிறபோது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், ஏற்கெனவே பெய்த மழை பதிவுகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 5 இடங்களில் அதி கனமழையும், 48 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழையைப் பொருத்த வரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்.1 முதல் இன்று (அக்.16) வரையிலான காலக்கட்டத்தில், 138 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 71 மி.மீட்டர். இது இயல்பைவிட 94 சதவீதம் அதிகமாகும். தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 280 கி.மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 320 கி.மீட்டர் தொலைவிலும், ஆந்திரப்பிரதேசம், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.17) அதிகாலை வடதமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக அடுத்து வருகிற 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வருகிற 24 மணி நேரத்துக்கு திருவள்ளூர்,காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

அக்.17ம் தேதி, திருவள்ளூர்,காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, புதுவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடதமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்க கடல், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், இன்று (அக்.16) முதல் அக்.18ம் தேதி வரை மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், அனைத்து இடங்களிலும் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்று அர்த்தமில்லை. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. காலை மற்றும் பகல் பொழுதுகளுக்கும் வானிலையில் வேறுபாடு இருக்கும். நாளை காலை கரைக்கு அருகில் வருகிற போது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், ஏற்கெனவே பெய்து வரும் மழை பதிவுகள் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால், ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், ரெட் அலர்ட் என்பது 2 மணி முதல் 4 மணிக்கு ஆனது இல்லை. அதனால்தான், வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரம், அடுத்து வருகிற 48 மணி நேரம் என்ற வகையில் கூறுகிறது. அதாவது காலை 8.30 மணி முதல் அடுத்த நாள் காலை 8.30 மணிக்கானது, கால அளவாக அதை புரிந்து கொள்ள வேண்டும். காரணம், இந்த வானிலை நிகழ்வு மொத்தமாக கலைந்துவிடவில்லை. இன்னும் கடலில் இருப்பதால், கரையை நோக்கி வரும்போது மழைக்கு வாய்ப்பு உள்ளது, எனவேதான் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது. எச்சரிக்கையாக இருப்பதற்காகவே ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal