அமெரிக்காவில் துரை தயாநிதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை அவரது மனைவி அனுஷா வெளியிட்டிருப்பது, அழகிரியின் ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையிலும், பிறகு சென்னை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கு பிறகு, வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். ஸ்ட்ரெச்சரில் சிகிச்சை பிரிவுக்குள் அழைத்து செல்லப்பட்டதுமே, அவருக்கு மருத்துவமனையின் ஏ பிளாக்கில் துரை தயாநிதிக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் ஆரம்பமாகின. அந்த நொடியிலிருந்தே இந்த சிகிச்சை பிரிவுக்கட்டிடமானது போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதி, பூரண குணமடைந்தார். மருத்துவமனையில் இருந்தும் கடந்த மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அழகிரியும், தாய் காந்தியும் தயாநிதியை வெளியே அழைத்து கொண்டு வந்தார்கள். 294 நாட்களுக்கு பிறகு துரை தயாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது, அழகிரியின் குடும்பத்தினரை பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட துரை தயாநிதி, தன்னுடைய காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். ஆனால், மருத்துவமனையிலிருந்து துரை தயாநிதி வெளியேறியபோது, அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், மீடியாக்களை படம் பிடிக்க விடாமல் தடுத்தனர்.. சிலரது செல்போனையும் பிடுங்க முற்பட்டதால், மருத்துவமனை வாயிலில் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய துரை தயாநிதி, மேல் சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் தற்போது உடல்நலம் தேறி வருவதால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தன்னுடைய அக்கா அஞ்சுக செல்வியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது தனது மனைவியுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தன்னுடைய கணவர் துரை தயாநிதியின் போட்டோவை, அவரது மனைவி அனுஷா முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.
ஆனால், துரை தயாநிதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனபோது, அனுஷா மட்டும் மிஸ்ஸிங் என்று சோஷியல் மீடியாவில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.. “இத்தனை மாத கால சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகும் நேரத்தில், அனுஷா மட்டும் ஏன் வரவில்லை?” என்று கேட்கப்பட்டதற்கு, குடும்பத்தினரிடமிருந்து சரியாக பதில் கிடைக்கவில்லை என்றெல்லாம் கிசுகிசுக்கள் கிளப்பி விடப்பட்டது..
ஆனால், அத்தனை சலசலப்புகளுக்கும், முணுமுணுப்புகளுக்கும், தற்போது தயாநிதியின் போட்டோவை வெளியிட்டு, பதிலடி தந்துள்ளார் மனைவி அனுஷா.. இந்த போட்டோவை பார்த்த பிறகு அழகிரி மற்றும் துரை தயாநிதியின் ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.