தி.மு.க.வினுடைய செலவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு நடந்ததாக திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில், கடந்த அக்டோபர் 2ம் தேதி வி.சி.க.,வின் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. மாநாட்டில் தி.மு.க., சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்., இளங்கோவன் பங்கேற்றனர். இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
அ.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் சீனிவாசன் பேசும்போது, ‘‘வி.சி.க., தலைவர் திருமாவளவன், ‘மது ஒழிப்பு என்ற மாநாடு நடத்த போகிறேன். அதற்கு எல்லா கட்சிகளும் வரலாம். அ.தி.மு.க.,வும் வரலாம்’ என்று ஒரு வார்த்தை சொன்னார். அப்போது, அமெரிக்காவில் இருந்தார் முதல்வர் ஸ்டாலின். வந்த உடன் திருமாவளவனை சந்தித்த ஸ்டாலின், ‘மாநாட்டில் எடப்பாடியார் கலந்து கொள்ளலாம் என்று சொல்லுறீங்களே, அது அரசாங்கத்தை எதிர்ப்பதாக இருக்காதா? நீங்கள் இப்படி ஒரு தீர்மானத்தை போடலாமா? அந்த மாநாட்டை நடத்தலாமா? இதற்கு எடப்பாடியாரை கூப்பிடலாமா’ என்று கேட்கிறார்.
இதற்கு, ‘அது உங்களுக்கு ஆதரவாக தான் செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் திருமாவளவன். பேசி முடிந்ததற்கு பிறகு, ‘மாநாடு நடத்துங்கள், அந்த மாநாட்டில் தி.மு.க., கலந்து கொள்ளும். எங்கள் சார்பில், ஆர்.எஸ்.பாரதி, இளங்கோவன் பங்கேற்று வாழ்த்துவார்கள். அரசாங்கத்திற்கு எதிராக எந்த தீர்மானமும் போட வேண்டாம். மத்திய அரசிற்கு எதிராக எல்லாம் போடுங்கள்’ என்று சொல்லி விட்டார்.மாநாட்டுக்கு அத்தனை செலவுகளும், நேரு, எ.வ.வேலு பார்த்துக்கொள்ள, தி.மு.க., போட்ட மேடை, தி.மு.க., போட்ட சேர்கள் மற்றும் தி.மு.க.,வின் செலவிலே வி.சி.க., தொண்டர்களை உட்கார வைத்த பெருமை திருமாவளவனுக்கு அன்றறைக்கு சேருகிறது.
ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பார்கள் என்று சொல்லுவார்கள். திருமாவளவன் அண்ணா தி.மு.க.,வினரை அழைத்த ஒரே வார்த்தைக்காக, பல கோடி ரூபாயை ஆதாயமாக ஸ்டாலின் இடமிருந்து அமைச்சர்கள் மூலம் பெற்று அந்த மாநாட்டை நடத்தியதாக ஒரு நாடகம் ஆடுகிறார்கள். ஏன் இதை சொல்கிறேன் என்று சொன்னால், அ.தி.மு.க., கூட்டணிக்கு திருமாவளவன் கட்சி போகப்போகிறது என்று பத்திரிகைகளில் எழுதினால், என்ன விளைவு வரும் என்று திருமாவளவனுக்கு தெரியும். தெரிந்து தான் அந்த ஆயுதத்தை எடுத்துப்போடுகிறார். அது அவருக்கு வெற்றி கொடுத்துவிட்டது’’ என்று பேசினார்.
திண்டுக்கல் சீனிவாசனின் பகீர் குற்றச்சாட்டிற்கு, திருமாவளவன் கடும் எதிர்ப்பையும், மறுப்பையும் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ‘‘வி.சி.க., மது ஒழிப்பு மாநாடு தி.மு.க., செலவில் நடந்ததாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. எங்களுக்கு எதிரான விமர்சனம் நகைப்புக்குரியது. திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அபாண்டமான அவதூறு.
இதனை பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். விடுதலை சிறுத்தை கட்சி பொதுமக்களின் ஆதரவோடும், ஒத்துழைப்போடும் தான் இயங்கி கொண்டு இருக்கிறோம். இது நாடு அறிந்த உண்மை. மக்கள் அறிந்த உண்மை’’ என்றார்.
யார் காசில் யார் மாநாடு போட்டது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!