திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தி.மு.க., சேர்மன் பூங்கோதை தி.மு.க., துணை சேர்மன் மாரி வண்ணமுத்து உள்ளிட்ட அக்கட்சியினரே வன்கொடுமை செய்ததாக பதவியை ராஜினாமா செய்தார்.

பூங்கோதை தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கு தி.மு.க., துணை சேர்மன் உள்ளிட்டவர்கள் மரியாதை தருவதில்லை என புகார் எழுந்தது. மேலும் சேர்மன் இருக்கையில் சிலர் அமர்ந்து கொண்டு தாங்கள் தான் சேர்மன் என பதிவிடுவதாகவும், உடைந்த நாற்காலியில் உட்கார வைப்பதாகவும் பூங்கோதை குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகாரும் தெரிவித்தார். இந்நிலையில் சிலர் கும்பலாக சென்று அவரை தாக்க முயன்றனர். இதனால் பூங்கோதை அவர் பதவியை செப்., 19ல் ராஜினாமா செய்து கலெக்டருக்கும் அனுப்பினார். இருப்பினும் மாவட்ட நிர்வாகமோ, போலீசாரோ புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

பூங்கோதையின் கணவர் சசிகுமார் கூறுகையில், ”தி.மு.க., அரசு பெண்களை, சமூக நீதியை பாதுகாக்கும் என நம்புகிறேன். என் மனைவியை தொடர்ந்து பொறுப்பில் செயல்பட முடியாதபடி சிலர் மன உளைச்சல் தருகின்றனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கும் மனு அனுப்பியுள்ளேன்,” என்றார். மாவட்ட நிர்வாகம் தரப்பில்,’பூங்கோதை புகார் குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது,’ என தெரிவிக்கப்பட்டது.

நெல்லை பெண் மேயர் ராஜினாமா பற்றி நெல்லை, தென்காசி (முன்பு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது) மாவட்ட நடுநிலையான உடன்பிறப்புக்களிடம் பேசினோம். ‘‘சார், தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத கோஷ்டி பூசல் நெல்லை, தென்காசியில் இருக்கிறது. நெல்லைக்கு பொறுப்பு அமைச்சராக கே.என்.நேருவை தி.மு.க. தலைமை நியமித்திருக்கிறது. அவரால், இங்குள்ள கோஷ்டி பூசலை நடுநிலையோடு தீர்க்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நடக்கும் உட்கட்சி பூசலை தி.மு.க. தலைமையே நேரடியாக கவனம் செலுத்தினால் மட்டுமே வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெல்ல முடியும். ஏனென்றால் ஏற்கனவே கடந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய வேட்பாளர்களை உள்ளடி வேலைகளால் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal