அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி யாரையும் கட்சியை விட்டு நீக்காமல் இருந்தார். ஆனால், நேற்று தளவாய் சுந்தரத்தை நீக்கியதுதான் அ.தி.மு.க.வில் பேசுபொருளாக ஆனது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாடு பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்தவர் தான் தளவாய் சுந்தரம். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர்.
2016 சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் அதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் கிடைக்காத நிலையில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரத்திற்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. மதுரையை தாண்டி எடப்பாடி பழனிச்சாமி எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அங்கு கட்டாயம் தளவாய் சுந்தரம் இருப்பார். அந்த அளவுக்கு நெருக்கமான தளவாய் சுந்தரத்தின் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறிக்க காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தது தான் என்பது வெளிப்படையான விஷயம். ஆனால் உட்கட்சி பூசல் காரணமாக அவருக்கு எதிராக தொடர்ந்து பல புகார்கள் தலைமைக்கு பறக்க இறுதியாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை வைத்து அவரது பதவி பறிக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இதுவே முக்கிய காரணம் இல்லை.
2011ம் ஆண்டிலிருந்து அதிமுகவில் ஓரம் கட்டுப்பட்ட வரும் தளவாய் சுந்தரம் எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கத்தை பயன்படுத்தி மீண்டும் கட்சிக்குள் வந்தார். இந்த நிலையில் தனது பகுதிக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியானது. நடந்து முடிந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மட்டுமல்ல அது ஏற்கனவே பல நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.
மேலும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றதாகவும் ஆனால் கட்சித் தலைமைக்கு எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது அதனை கண்டும் காணாமல் தலைமை இருந்திருக்கிறது. தற்போது கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சரான பச்சைமால் மற்றும்- அசோகன் ஆகியோர் தலைமையில் இரு கோஷ்டிகளாக அதிமுக செயல்பட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் பங்கேற்றதை தொடர்ந்து தளவாய் சுந்தரம் குறித்து எதிர் அணியினர் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளனர். மேலும் தலைமைக்கு இந்த தகவலை கொண்டு சென்றனர்.
தவிர, கடந்த மக்களவைத் தேர்தலை தளவாய் சுந்தரத்தின் பரிந்துரையை ஏற்று பசலியான் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக நான்காம் இடத்திற்குச் சென்றது இதற்கும் தளவாய் சுந்தரம் தான் காரணம் என எதிர் அணியினர் ஆதாரங்களை எடப்பாடியிடம் அடுக்கியிருக்கின்றனர்.
ஏற்கனவே தளவாய் மீது கடுங் கோபத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறிய நிலையில் தற்போது ஆர்எஸ்எஸ் உடன் நெருக்கம் காட்டிய நிலையில், தளவாய் சுந்தரத்தின் பதவி பறித்திருக்கிறார் என்கின்றனர். தளவாயின் நீக்கம், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி சீனியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
சரி, குமரியில் அ.தி.மு.க. நான்காம் இடம் சென்றதற்கு காரணமா தளவாயின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மதுரையில் அ.தி.மு.க. மூன்றாம் இடம் சென்றதற்கு காரணமானவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ரத்தத்தின் ரத்தங்கள் ஆதங்கப்படுகிறார்கள்.