அதிமுக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஐடி விங் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட போது, செல்போனால் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், வீடியோ எடுக்கும் போது மற்றொருவர் தட்டி விட்டதாக அதிமுக ஐடி விங் விளக்கம் அளித்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருக்கும் எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் எல்இடி டிஜிட்டல் விளம்பர பலகையை திறந்து வைத்தார். இந்த பலகை நிரந்தரமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
அதில் ஐடி விங் சார்பில் அதிமுகவினுடைய சாதனைகளை காட்சிப்படுத்தக்கூடிய வகையிலும் ஜெயலலிதா எம்ஜிஆர் எடப்பாடி பழனிச்சாமியின் நிகழ்ச்சிகள் பேச்சு உள்ளிட்டவை ஒளிபரப்பப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் இபிஎஸ் 2024 என்கிற ஹேஸ்டேக்குடன் கூடிய விளம்பர பலகையையும் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். கூட்டத்தில் அதிமுகவில் அடுத்த 18 மாதங்களுக்கான நிர்வாகிகள் செயல்பாடுகள், ஐடி விங் நிர்வாகிகளின் செயல் திட்டங்கள், அதிமுகவின் சாதனைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவது, அதிமுக போராட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது என பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக ஐடி விங் சார்பாக எல்இடி டிஜிட்டல் பதாகையை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அப்போது திடீரென எங்கிருந்தோ பறந்து வந்த செல்போன் ஒன்று அவரது கன்னத்தில் பலமாக தாக்கியது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி சற்று அதிர்ச்சி அடைந்தாலும் செல்போனை தட்டி விட்டு சிரித்த முகமாக காணப்பட்டார். அதே நேரத்தில் அவருக்கு அருகில் இருந்த நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து யாருயா அது என நிர்வாகிகள் ஆவேசமாகக் கேட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி வேண்டாம் விடுங்க என கூறியவாரே சென்றார். தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பலரும் விமர்சித்தனர். மேலும் ஒரு சில தொலைக்காட்சிகளில் எடப்பாடி பழனிச்சாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்த தகவலை அதிமுக மறுத்திருக்கிறது.
இது தொடர்பாக அதிமுக ஐடி விங் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறது. அதில் எடப்பாடி பழனிச்சாமி எல்இடி திரையை திறந்து வைத்த போது ஏராளமான ஐடி விங் நிர்வாகிகள் அதனை வீடியோ எடுத்தனர். அப்போது ஒரு தொண்டர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என கையை உயர்த்தி கோஷமிட்டபோது அருகில் இருந்தவரின் செல்போன் பறந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியின் மீது விழுந்தது. இதனைத் தான் எடப்பாடி பழனிச்சாமி மீது தாக்குதல் நடத்தியதாக பரப்பி வருகின்றனர்.
அதிமுக இளைஞர் படையின் எழுச்சி பெறுவதை பொறுக்க முடியாமல் வதந்தி பரப்பி வருவதாகவும், அவர்களின் இருட்டடிப்பு நாடகம் இன்னும் 15 அமாவாசைகள் தான் என ஐ டிவி விளக்கம் அளித்துள்ளது.
ராஜ் சத்தியன் தலைமையிலான அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஆளும் தி.மு.க.விற்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பதிலும் தவறவில்லை..!