‘உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை’ என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகத்தில் ‘தூய்மையே சேவை’ என்ற பிரச்சார இயக்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
மத்திய அரசின் மூலம், செப்.18 முதல் அக்.2-ம் தேதி வரை சேவை வாரங்களாக கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறோம். பெண் குழந்தைகள் உள்ள பள்ளிகள் மற்றும் வீடுகளில் 100 சதவீதம் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நம் நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 2047-ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை – பெங்களூரு, சென்னை – விசாகப்பட்டினம் இடையே தொழில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. அத்துடன், சென்னை, காமராஜர், தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஆகியவை சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படுகிறது. சென்னையை அடுத்த திருமழிசையில் சரக்குக் கிடங்கு பூங்கா கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் பிரதமரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த சந்திப்பின் அடுத்தக் கட்டமாக பிரதமர் அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. திமுக வந்தபின்தான் மதுவும், போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இவ்வாறு கூறினார். முன்னதாக தூய்மை பாரதம் திட்டத்துக்கான உறுதிமொழியை ஊழியர்கள் உடன் எடுத்துக் கொண்டார்.