‘‘ரேஷன் பொருட்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘ஏழை மக்களுக்கு கொடுக்கப்படும் ரேஷன் பொருட்களில் கொள்ளை அடித்த கிறிஸ்டி நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் 3 வருடங்களாக பாதுகாத்து வருகிறார். தமிழகத்துக்கு துணை முதல்வர் அதோ வருகிறார், இதோ வருகிறார் என்று கோமாளித்தனம் செய்து கொண்டு இருக்காமல், கிறிஸ்டி நிறுவனம் மீது எப்.ஐ.ஆர்., எப்பொழுது வரும் என்று சொல்லுங்கள்.

4 மாதங்கள் கழித்து அறப்போர் புகார் மீது முதல் எப்.ஐ.ஆர்., பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை 3 வருடங்களாக ரேஷன் ஊழலில் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மிகவும் அப்பட்டமாக நடந்தேறிய ரேஷன் ஊழல் பற்றி அறிந்து கொள்ள இந்த காணொளி பாருங்கள் என்று ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் கூறியதாவது:- ‘‘2021ல் கடைகளில் பருப்பு சில்லறை விலையில் ரூ.100க்கும், மொத்த விலையில் ரூ.90க்கும் விற்பனையாகியது. ஆனால், ரேஷன் கடைக்கு கிறிஸ்டி நிறுவனத்திடம் இருந்து பருப்பை ரூ.146க்கு அரசு கொள்முதல் செய்கிறது. 6 ஆண்டுகளாக மார்க்கெட் விலையை விட, கிறிஸ்டி நிறுவனத்திற்கு ரூ.30 முதல் ரூ.50 வரை கூடுதல் விலை கொடுத்து அரசு வாங்குகிறது. அதேபோல, சர்க்கரைக்கு ரூ.10 கூடுதலாக கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதிக விலை கொடுத்து அரசு வாங்குவதால் தான், ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் பொருட்கள் முழுமையாக வழங்க முடியாமல், தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகிறது.

இது தொடர்பாக புகார் அளித்ததை தொடர்ந்து, டெண்டரை ரத்து செய்துவிட்டு, மீண்டும் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்ற அதே கிறிஸ்டி நிறுவனம், பருப்பை ரூ.87க்கு தருவதாக முன்மொழிந்துள்ளது. இதன்மூலம், கடந்த காலங்களில் தமிழக அரசிடம் இருந்து பருப்புக்கு ரூ.60 அதிகம் பெற்றதை வாக்குமூலமாக கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தை நாடினோம். அப்போது, இதுக்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் என்று நீதிபதியே கேள்வி எழுப்பினார். இவ்வளவு ஆதாரத்துடன் கொடுத்தும், லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை.

வழக்குப்பதிவு செய்யாமல், கிறிஸ்டி நிறுவனத்தையோ, அதானி நிறுவனத்தையோ காப்பாற்றுவோம் என்றால், முதல்வர் ஸ்டாலின் அந்த நிறுவனங்களில் போய் வேலை செய்யட்டும். இங்கு எதுக்கு முதல்வராக இருக்கிறீர்கள்?

தூங்குபவர்களுக்கு காப்பிப் பொடியை அனுப்பி எழுப்பலாம். தூங்குவதைப் போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும் என்று எல்லாரும் கேள்வி எழுப்புகின்றனர். ஒருவேளை தூக்கத்தில் இருந்து எழுந்திருத்து எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவில்லை என்றால், நாளை பூட்டு அனுப்பலாம்’’ எனக் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal