நடிகை மஞ்சு வாரியர், தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து வெற்றிமாறனின் ‘விடுதலை 2’, ஆர்யாவின் ‘மிஸ்டர் எக்ஸ்’ படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில், தமிழில் சிறந்த கதாபாத்திரங்கள் தனக்குக் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “கேரளாவில் ஜாதி, மதம் தாண்டி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். ஒட்டு மொத்த கேரளாவும் கொண்டாடும் பண்டிகை என்பதால் மகிழ்ச்சியான விழாவாக இருக்கும். இதுபோன்ற பண்டிகைகளில் வீட்டில் இருக்க முடியாமல் போனால் படப்பிடிப்புகளில் கொண்டாடும் போது அதில் இணைந்து கொள்கிறேன். கடந்த ஓணம் பண்டிகைக்கு எங்கேஇருந்தேன் என்பது நினைவில்லை. இந்தப் பண்டிகையில் ‘விடுதலை 2’ படப்பிடிப்பு இருக்கிறது. ‘வேட்டையன்’ படத்தில் ரஜினி சாரின் மனைவியாக நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர் தாரா.
ரஜினி சாரின் ஸ்டைல்களை படங்களில்தான் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது.அதைப் பெருமையாக நினைக்கிறேன். இதில் இடம்பெற்றுள்ள ‘மனசிலாயோ’ பாடலுக்கு ஏராளமான நடனக் கலைஞர்களுடன் ஆடியது இதுவரை கிடைக்காத அனுபவம்.தமிழில் சிறந்த கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன.
‘அசுரன்’ படத்தில் இருந்து ‘துணிவு’ படத்தின் கேரக்டர் வித்தியாசமானது. ‘வேட்டையன்’ படத்தில் இதிலிருந்து மாறுபட்ட கேரக்டர். ‘விடுதலை 2’, ‘மிஸ்டர் எக்ஸ்’ கதாபாத்திரங்களும் அப்படித்தான்” என்று மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.