அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, இந்த வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 -2011 திமுக ஆட்சி காலத்தில் தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரும் அவரது மனைவி மணிமேகலையும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக கடந்த 2012-ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 8 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் தன் மீது அவதூறாக தொடரப்பட்டுள்ளதால், சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தன்னையும், தனது மனைவியையும் விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, கடந்த 2022 டிசம்பரில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், இதே நீதிமன்றத்தில் நடந்த சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டனர்.
இந்த இரு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இதில், சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து இரு அமைச்சர்களையும் விடுவித்தது செல்லாது என அறிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கவும், செப்டம்பர் 9-ம் தேதி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும், 11-ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசுவும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு தடை கோரி அமைச்சர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, இன்று (செப்.14) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் மாரியப்பன் ஆஜராகி, வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவு நகலை சமர்ப்பித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயகுமார் உத்தரவிட்டார். முன்னதாக, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்கு விசாரணை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.