‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் அமையாது’ என கே.என்.நேரு ஓபனாக (அடுத்த நாளே ‘மாற்றி’ விளக்கத்தைக் கொடுத்தார்) பேசினார். இந்த நிலையில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சி’ நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.,வும் பங்கேற்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2ம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் நடத்துகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் மாநாடு தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்நிலையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருமாவளவன் கூறியதாவது;

‘‘மதுவிலக்கை தேசியகொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வரும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும். மது ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரசாரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். மது விற்பனை மூலம் வருவாயை அரசு பெருக்க நினைப்பது ஏற்புடையது அல்ல. மதுவிலக்கு அவசியம், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஒரு திறந்தவெளி அறிவிப்பாக இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன. அ.தி.மு.க.,வும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறது. வேண்டும் என்றால் நாங்கள் நடத்தும் இந்த மாநாட்டில் எங்களுடன் அ.தி.மு.க.,வும் சேர்ந்து மதுவிலக்கை வலியுறுத்தட்டும்’’ என்று திருமாவளவன் கூறினார்.

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு விடுத்துள்ள அழைப்பு அரசியல் அரங்கில் சற்று உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘மதுவிலக்கு மாநாடால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்று எல்லோரும் அறிந்த ஒன்று. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு மாநாடு மாநில அல்லது மத்திய அரசுக்கு என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது?

சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என்று அ.தி.மு.க., அறிவித்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகளின் இந்த அழைப்பை அவ்வளவு எளிதில் ஒதுக்கி வைத்துவிட முடியாது. மாநாட்டில் என்ன மாதிரியான தீர்மானங்கள், நிலைப்பாடுகள் எடுக்கப்படும் என்பதை பொறுத்தே அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை கணிக்க முடியும். எனிலும் திருமாவின் இந்த அழைப்பு எடப்பாடி பழனிசாமியை குஷிப்படுத்தியிருக்கிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal