நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க.வின் ‘மாஜி’க்கள் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தி.மு.க., அ.தி.மு.க. இருபெரும் இயக்கங்களில் இருந்தும் த.வெ.க.வில் முக்கிய நிர்வாகிகள் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை அணுகியுள்ளனர். அதிமுகவில் தன்னை கட்சித் தலைமை கண்டு கொள்ளாமல் இருப்பதால், அவரும் விஜய் கட்சிக்கு தாவி விடலாமா? என்று தனது நலன் விரும்பிகளிடம் விவாதித்திருக்கிறார்.

அதற்கு பாசிட்டிவ்வான பதிலே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விஜய் கட்சிக்கு தாவுவதற்கு தயாராகி வருகிறார் முன்னாள் அமைச்சரான செஞ்சி ராமச்சந்திரன். த.வெ.க.வுக்கு அவர் வரும் பட்சத்தில் அவருக்கு அவைத் தலைவர் பதவி தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் விஜய் கட்சியின் நிர்வாகிகள்.

த.வெ.க. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் தேதி தவெக முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கிறார். முக்கியமாக சில பழைய கைகளை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை நடிகர் விஜய் முடுக்கி விட்டு உள்ளாராம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாட்டிற்கு முன்பாக அ.தி.மு.க.வில் உள்ள சில ‘மாஜி’க்களும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது, மலைக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ‘மாஜி’ ஒருவரும் த.வெ.க.வில் இணைய இருக்கிறாராம்.

இது பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, ‘‘சார், அ.தி.மு.க.வில் இணைப்பு சாத்தியமில்லை. ஆத்தூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகரிடம் ‘விட்டமினை’ கொடுத்தால் மா.செ. பதவி வாங்கிவிடலாம். மலைக்கோட்டையில் ஜூனியர்கள் பின்னால், சீனியர்கள் செல்லும் அவலம் இருக்கிறது. இதற்கு காரணம் ஆத்தூர் காரர்தான். எனவே, எங்கள் அண்ணனும் மா.செ. பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அது கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இந்த நிலையில்தான் த.வெ.க.வில் இணைய முடிவெடுத்திருக்கிறார்’’ என்றனர்.

இதே போல், நாமக்கல், கோவை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. மாஜிக்களும் த.வெ.க.வில் இணைய யோசித்து வருகிறார்களாம். அதே போல், டி.டி.வி. கட்சியில் இருக்கும் ஒன்றியச் செயலாளர்களும் புஸ்ஸி ஆனந்திரம் பேசி வருகிறார்களாம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal