‘‘திமுகவிற்கு தற்போது எதிரிகள் அதிகம் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை போன்று, சட்டசபை தேர்தல் கூட்டணி சுமூகமாக அமையும் சூழல் இல்லை’ என அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கூட்டணிக் கட்சிகள் பிரிந்து செல்லாத வகையில் கூட்டணியை பலமாக கட்டிக்காப்பாற்றி வருகின்றனர். அதன் வெளிப்பாடாக உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை தேடித்தந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக.,வின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்து வருகின்றன. இதனால் கூட்டணிக்குள் பிரிவு ஏற்படும் சூழல் இருந்தாலும், அதனை திமுக தலைமை சமாளித்து வந்தது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: ‘‘ மக்களவைத் தேர்தலை போன்று, சட்டசபை தேர்தல் கூட்டணி சுமூகமாக அமையும் சூழல் இல்லை. திமுகவிற்கு தற்போது எதிரிகள் அதிகம் உள்ளனர். ஒருபுறம் சீமான் குறைசொல்லிக் கொண்டிருக்கிறார்; புதிதாக கட்சி துவங்கிய ஒருவர் நமக்கு எதிராக இருக்கிறார். எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் பாமக நம்மைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்’’இவ்வாறு பேசியுள்ளார்.

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும். தற்போதைய கூட்டணி தொடர வாய்ப்பில்லை என்று கே.என்.நேரு ஓபனாக பேசியிருப்பதுதான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal