தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடுமாறு அரசுக்கு நடிகை சமந்தா வலியுறுத்தி உள்ளார்.
மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி ஹேமா கமிட்டி அண்மையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் முன்னணி நடிகர்களே நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவங்கள் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் புயலை கிளப்பி உள்ளதை அடுத்து ஏராளமான நடிகைகள் திரையுலகில் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி பேசி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழ் திரையுலகில் ஹேமா கமிட்டி போல் ஒரு குழு அமைத்து இங்குள்ள நடிகைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறி இருக்கிறார். இன்னும் சில தினங்களில் இந்த குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கானா அரசுக்கு நடிகை சமந்தா வலியுறுத்தி இருக்கிறார். தெலுங்கு திரையுலகில் இருந்து இதுதொடர்பாக குரல் கொடுத்த முதல் நடிகை சமந்தா தான். அந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமையும் என நடிகை சமந்தா கூறி இருக்கிறார்.
நடிகை சமந்தாவின் இந்த பதிவின் மூலம் விரைவில் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தெலுங்கு திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்காக தி வாய்ஸ் ஆஃப் உமன் என்கிற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் சமந்தாவும் இடம்பெற்று இருக்கிறார். அந்த குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையை தான் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.