காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதாரணி, கட்சியில் பதவி எதிர்பார்ப்பில் இருப்பதாகவும், ஆனால் 6 மாதங்களாகியும் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராகவும் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவாகவும் விஜயதாரணி செயல்பட்டார். காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாத நிகழ்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கேஎஸ் அழகிரி பதவி காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்க ஆலோசிக்கப்பட்டது.

அப்போது தலைவர் பதவியை பிடிக்க விஜயதாரணி பல வகையில் போட்டிபோட்டார். ஆனால் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக இருந்த செல்வப்பெருந்தகைக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இதனால் அதிருப்தியில் இருந்த விஜயதாரணிக்கு மேலும் ஒரு ஷாக் கொடுக்கும் வகையில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டார். தன்னை விட ஜூனியருக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

எனவே நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் விஜயதாரணிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால் நடைபெறவில்லை. விளவங்கோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என காத்திருந்தார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் பாஜகவிற்கு வந்தது தவறான முடிவோ என சிந்திக்க தொடங்கினார். இருந்த போதும் கடந்த 6 மாத காலமாக காத்திருந்தவருக்கு ஏமாற்றமே பரிசாக கிடைந்தது. இந்தநிலையில் தான் தனது அதிருப்தியை பாஜக மேடையில் கொட்டி தீர்த்து விட்டார்.

பாஜக சார்பாக சென்னையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜயகாரணி, ‘‘3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான், இருக்கிறதையும் விட்டுவிட்டு பாஜகவுக்கு வந்திருக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாஜகவிற்கு வரவில்லை. எதிர்பார்ப்போடுதான் வந்திருக்கிறேன். நல்லா உழைக்கணும் கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போக பதவி தேவை.

ஆறு மாதம் ஆகிவிட்டது இன்னும் பதவி கொடுக்கவில்லை. எனக்கு நல்லது பண்ணுவீங்க. என்னைப் போன்றவர்களின் பணியை பாஜக நிச்சயம் பயன்படுத்தும்’’ என விஜயதாரணி கேட்டார். இதனால் மேடையில் அமர்ந்திருந்த அண்ணாமலை முதல் மூத்த தலைவர்கள் வரை என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியாமல் தலை குணிந்து கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal