தனது தனி செயலாளர்கள் மூலம் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதேபோல் பல்வேறு காரணங்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
முதல் அமைச்சரின் தனி செயலாளர்களாக உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் செயல்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முதல் தனி செயலராக உமாநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, மின்சாரம், நிதி, உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, பொது, தொழில், நகராட்சி நிர்வாகம், நீர்வளம் உள்ளிட்ட துறைகள், விஜிலென்ஸ் கமிஷன் போன்றவை ஒதுக்கப்பட்டு உள்ளன.
இரண்டாவது தனி செயலராக சண்முகம் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு, வேளாண்மை, கூட்டுறவு, உணவு, உயர்கல்வி, வீட்டுவசதி, மனிதவளம், சட்டம், சட்டசபை, வருவாய், ஊரக வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி, ஹிந்து அறநிலையம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. முதல்வரின் அலுவலக நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பும், இவரிடம் தரப்பட்டுள்ளது.
முதல்வரின் மூன்றாவது செயலராக அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு, எஸ்.சி., – எஸ்.டி., நலம், கால்நடை பராமரிப்பு, பி.சி.,-எம்.பி.சி., நலம், சுற்றுச்சூழல், மக்கள் நல்வாழ்வு, குறு, சிறு தொழில்கள், பள்ளி கல்வி, சமூகநலம், மாற்றுதிறனாளிகள் நலம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
அரசியல் தொடர்பில்லாத முதல்வரின் சந்திப்புகள், சுற்றுப்பயண ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பும், இவரிடம், கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது
இணை செயலராக நியமிக்கப்பட்டு உள்ள லட்சுமிபதிக்கு, கைத்தறி, தகவல் தொழிற்நுட்பம், தொழிலாளர் நலன், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், திட்டம் மற்றும் வளர்ச்சி, சமூக சீர்த்திருத்தம், சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
அமைச்சர்களுக்கு செக் வைக்கும் விதமாக முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது இப்படி தனிச் செயலாளராக இருப்பவர்களுக்கு துறை ரீதியாக அதிகாரத்தை அதிகம் வழங்குவார். காரணம், அமைச்சர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டுவிடக் கூடாது. அவர்களை அதிகாரிகள் கண்காணிப்பிலேயே வைத்திருப்பார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வெளிநாடு செல்லும் சமயத்தில் அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்டு செக் வைக்கும் விதமாக தனிச் செயலாளர்களுக்கு அமைச்சர்களுடைய துறை ரீதியலான அதிகாரத்தை வழங்கியிருக்கிறார்’’ என்றனர்.
தமிழக முதல்வத் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றாலும், அவரது மனது முழுவதும் தமிழகத்திலேயே குறியாக இருக்கிறது & சபாஷ்..!