துறையூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் முதல்வர் பெயரை தனது பெயரின் முன்னாள் வைத்திருக்கும் ஸ்டாலின் குமார்தான்! இவர் துறையூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் நடுத்தரமான மக்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எல்.ஏ. என்ற ‘கர்வம்’ பார்க்காமல் சாதாரணமாக மிகவும் எளிமையாக பழகக்கூடியவர்தான் ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ.! அதனால்தான் இரண்டாவது முறையாக ஸ்டாலின் குமாரை துறையூர் தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

முன்பு உப்பிலியபுரம் தொகுதியாக இருந்ததுதான் தற்போது துறையூர் தொகுதியாக மாறியிருக்கிறது. உப்பிலியபுரமும் துறையூர் தொகுதிக்குள் அடங்கும். தற்போது துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் எம்.எல்.ஏ. நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.

இது பற்றி துறையூர் மற்றும் உப்பிலியபுரம் ஒன்றியத்தில்¢ உள்ள நடுநிலையான மூத்த உடன் பிறப்புக்களிடம் பேசினோம். ‘சார், துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரைப் பொறுத்தளவில் யாரிடமும் ‘அதிர்ந்து’ கூட பேசமாட்டார். யார் என்ன உதவி கேட்டாளும் தன்னால் முடிந்ததை உடனடியாக செய்துகொடுப்பார். இவரை வைத்து சம்பாதித்தவர்கள்தான் இன்றைக்கும் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்கள்.

தற்போது எம்.எல்.ஏ.வுக்கும் ஒன்றியச் செயலாளர்களுக்கும் பிரச்னையாக கூறப்படுவது என்னவென்றால், அமைச்சர் கே.என்.நேருவைப் பற்றி தலைமையிடம் ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. புகார் கூறியதாகச் சொல்லித்தான் ஒன்றியச் செயலாளர்கள் எம்.எல்.ஏ. நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பளையத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஏழைமக்களின் கோரிக்கை மனுக்களை எம்.எல்-.ஏ., ஸ்டாலின் குமார் பெற்றார். அப்போது உடனிருக்க வேண்டிய ஒன்றியச் செயலாளர் உடன் இல்லை. எம்.எல்.ஏ. போன பிறகு, ஒன்றியச் செயலாளர் மனுக்களை வாங்குகிறார். மக்கள் பிரச்னையை மக்கள் பிரதிநிதி தீர்ப்பாரா? இல்லை ஒன்றியச் செயலாளர் தீர்ப்பாரா?

ஒரு கட்சியின் ஆனிவேரே ஒன்றியச் செயலாளர்கள்தான். ஆனால், இங்கு காண்டிராக்ட், கமிஷன், கலெக்ஷன் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். கட்சிப் பணியை பார்ப்பதைவிட்டுவிட்டு பினாமி பெயரில் காண்டிராக்ட்களை எடுத்து கல்லா கட்டி வருகிறார்கள். இது தொடர்பாக துறையூர் & உப்பிலியபுரம் ரோட்டில் மலைபோல் குவித்து வைத்திருக்கும் ஜல்லிக்கற்களே சாட்சி..!

இதற்கு முன்பு வரை கமிஷன் பெறுவதில் குறியாக இருந்துவிட்டு, தற்போது எம்.எல்.ஏ.வுக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள். காரணம், கேட்டால் ‘எங்கள் அமைச்சர் மீதே புகார் கூறிவிட்டார்… அதனால்தான் நாங்கள் எம்.எல்.ஏ.வின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறோம்’ என கூறுகின்றனர். ஏற்கனவே, இவரைப் போன்ற ஒன்றியச் செயலாளர்களால்தான் அமைச்சர் நேரு இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அமைச்சர் பெயரைச் சொல்லி அடாவடியில் இறங்குவது. மேலும், மேலும் அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் ஒன்றியச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு மீது தி.மு.க. தலைமை கோபமாக இருப்பது உண்மைதான். காரணம், சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருடன் அமைச்சர் தரப்பினர் பேசும் புகைப்படம், ஆடியோ ஆதாரங்கள் தலைமைக்கு சென்றிருக்கிறது. தி.மு.க. தலைமையோ, ‘மாற்றுக்கட்சியில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, சேகர் பாபு போன்றவர்களே தி.மு.க.விற்கு விசுவாசமாக இருக்கும் நிலையில்… அமைச்சர் கே.என்.நேரு இப்படி செய்திருக்கக்கூடாது..’ என்கிறார்கள். இது பற்றி இதற்குமேல் விரிவாக சொல்லத் தேவையில்லை.

தவிர, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நேரு மீது தலைமையிடம் புகார் அளித்ததாக தகவல்கள் வெளியானது. ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி, லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. சௌந்திரபாண்டியன் ஆகியோர் நேரடியாகவே குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இந்த நிலையில்தான் துறையூர் எம்.எல்-.ஏ.வின் அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஒன்றியச் செயலாளர்களை நீக்கவேண்டும்’’ என்றனர்.

காண்டிராக்ட், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என இருக்கும் ஒன்றியச் செயலாளர்கள் மீது உண்மையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே துறையூர், உப்பிலியபுரம் தொகுதி உடன்பிறப்புக்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.

ஒரு கட்சியின் ஆணிவேரே (ஒன்றியச் செயலாளர்) ‘ஊழல்’ அழுக்கால் அழுகிப் போவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கைப் பார்த்தால், 2026 வேறுதிசை நோக்கி சென்றுவிடும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal