யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில்; பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், துளி கூட உண்மையில்லாத பல பொய்களைக் கூறி, தரக்குறைவாக பேசி உள்ளார். எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்.

அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும், என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.ஜி.ரகுநாதன், என்.செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து 2 வாரத்துக் குள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal