தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
சார்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் ஆகிய இருவர் ஆஜர் ஆனார்கள்.
வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டிருக்கிறார்.
கடந்த 2001 -& 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்கும் கீழ் தண்டனை உள்ள வழக்குகள் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த வழக்கும் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.