செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கக்கூடும். டெல்லி முன்னாள் அமைச்சர் சிசோடியா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி, செந்தில் பாலாஜிக்கும் ஜாமீன் வழங்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இன்று தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பல கட்டத்தை கடந்த நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறையால் சோதனை நடத்தப்பட்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டவர் பல முறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் கிழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பல முறை ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது, இந்த நிலையில் தான் டெல்லி மற்றும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து மீண்டும செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா அமர்வில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணைக்கு கடந்த மாதம் வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு மனுதாரர் செந்தில் பாலாஜிக்கு உதவி வருவதாக குற்றம்சாட்டியது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, டெல்லி முன்னாள் அமைச்சர் மணிஷ் சிசோடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி, செந்தில் பாலாஜிக்கும் அதே வகையில் ஜாமீன் வழங்க முடியும்தானே.? என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆகஸ்ட் 20ம் தேதி பதில் உள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை இன்று ஒத்தி வைத்திருந்தனர்.

இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சொலிசிட்டர் ஜெனரல் வரத் தாமதமாகும் எனக்கூறி வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்கக் கோரிய மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது. இன்று இறுதி நாள் என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். எனவே செந்தில் பாலாஜி வழக்கில் இன்று மாலை ஜாமின் தொடர்பாக பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal