பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கொலையில் தொடர்புடைய சம்போ செந்திலின் கூட்டாளிக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்தது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக முதலில் 11 பேர் காவல்நிலையத்தில் ஆஜரான நிலையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் தங்கள் பாணியில் நடத்திய விசாரணையில் முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சியை சேர்ந்தவர்கள் சிக்கினர்.

இதுவரை இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆமஸ்ட்ராங்கை முதலில் வெட்டிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரின் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஸ்கெட்ச் போட்ட பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் இந்த கொலைக்கு மூல காரணமாக இருந்தது ரவுடி சம்போ செந்தில் என கூறப்படுகிறது. இவரை கைது செய்ய பல இடங்களுக்கும் தனிப்படை சென்ற நிலையில் தப்பித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்மோ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அவரும் சிக்கவில்லை. இதனிடையே மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடன் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அடுத்ததாக இயக்குனர் நெல்சனிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal