வயநாடு நிலச்சரிவு மற்றும் தொடர் கனமழையால் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வார நாட்களில் இங்குள்ள பல சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.

தேனி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. பெரியாறு புலிகள் வனச்சரணாலய பகுதியான இங்கு படகுசவாரி, பசுமை நடை, பழங்குடியினர் கலைநிகழ்ச்சி, மலையேற்றம், வியூ பாய்ன்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா அம்சங்கள் உள்ளன. இதனால் உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 420-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதனால் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல ஏற்ற கால நிலை இது அல்ல என்ற மனோநிலை பலரிடம் ஏற்பட்டுள்ளது. மேலும், தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து அடிக்கடி இங்கு கனமழையும் பெய்து வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையால் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாய் குறைந்துள்ளது. இதனால், வார நாட்களில் தேக்கடியின் பல பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரிக்கிறது.இதனால் ஹோட்டல், வாடகை ஜீப், விடுதிகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்கள் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நறுமண மற்றும் மசாலா பொருட்கள் விற்பனையும் சரிந்துள்ளது.

இது குறித்து தேக்கடி வாடகை ஜீப் ஓட்டுநர்கள் கூறுகையில், “வயநாடு சம்பவத்துக்குப் பிறகு தேக்கடியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாய் குறைந்துவிட்டது. இதனால், வார நாட்களில் சுற்றுலா வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வருபவர்களும் படகு சவாரி மட்டுமே செல்கின்றனர்.

இதனால் கதகளி, களரி, மோகினியாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளும், பசுமை நடை, பழங்குடியினர் கலைநிகழ்ச்சி, சாகச மற்றும் முகாம் சுற்றுலாக்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் முன்பதிவு செய்தால்தான் படகுசவாரி நிச்சயமான பயணமாக இருந்தது. தற்போதைய காலநிலை மாற்றத்தால் குறைவான பயணிகளே படகில் சவாரி செய்யும் நிலை உள்ளது.” என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal