நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே, ஆளும் கட்சியினர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அப்படித்தான் வால்மிகி வாரிய நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் நாகேந்திரா பதவியை இழந்தார்.

அவரைத் தொடர்ந்து, தற்போது முதல்வர் சித்தராமையாவும் மூடா எனப்படும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, அவரது மனைவிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கியது தெரிய வந்தது. இது தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் சித்தராமையா, தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததற்கு இழப்பீடாகவே, அந்த மனைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க, உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சட்டசபையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில், மைசூரில் பேரணியியும் நடத்தப்பட்டது.

இதனிடையே மைசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பிரதீப் குமார், டி.ஜே., ஆப்ரஹாம் மற்றும் ஸ்னேகமயி கிருஷ்ணா ஆகியோர், மூடா முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த வேண்டும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் பொதுவழக்கு வழக்கு தொடர்ந்தனர். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் தாவர் சந்த் கெலாட் சித்தராமையாவிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், மூடா முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த கவர்னர் தாவர் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

கவர்னரின் இந்த செயலைத் தொடர்ந்து, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை வீழ்த்த சதி நடப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal